பொலிஸாரின் தாக்குதலைக் கண்டித்தும் நீதி கோரியும் வட்டக்கச்சியில் கதவடைப்பு!

347 0

கிளிநொச்சி, வட்டக்கச்சிப் பகுதியில் இளம் குடும்பஸ்தரின் கொலையைக் கண்டித்தும் அதற்கு நீதி கோரியும் அவரது குடும்ப உறுப்பினர்கள்மீது தரும்புரம் பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலைக் கண்டித்தும் கதவடைப்புப் போராட்டம் முன்னெடுக்கப் படுகிறது.

வட்டக்கச்சி பிரதேசத்தில் இன்று (புதன்கிழமை) முழு கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் பொதுச் சந்தை மற்றும் வர்த்தக நிலையங்களை மூடி மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

கிளிநொச்சியில் வட்டக்கச்சிப் பகுதியில் கடந்த பத்தாம் திகதி இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவத்தில் அருளம்பலம் துஷ்யந்தன் என்பவர் உயிரிழந்தார். இந்நிலையில், கத்தியால் குத்திய நபரின் வீட்டிற்குத் தீ வைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, கடந்த 15 ஆம் திகதி காலை பத்து மணியளவில் சந்தேகநபர்களின் வீட்டில் சில பொருட்களை எடுத்துச் செல்வதற்கு, அவரின் உறவினர்கள் பொலிஸாரின் பாதுகாப்புடன் சென்றிருந்தனர்.

இந்நிலையில், இறந்தவரின் மனைவி மற்றும் சகோதரிகள் உட்பட கிராம மக்கள் சிலர் ஒன்று சேர்ந்து இறந்தவருக்கு நீதி கிடைக்கவில்லை என்றும் பொலிஸார் போதுமான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்து பொலிஸாருடன் தர்க்கத்தில் ஈடுப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து பொலிஸார், தாக்குதலுக்கு இலக்காகி இறந்தவரின் மனைவி மற்றும் சகோதரிகள்மீது தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையிலேயே, பொலிஸாரின் தாக்குதலைக் கண்டித்தும் நீதி கோரியும் கதவடைப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.