காணி ஆவணங்களை கையாளும் அலுவலகம் வடக்கில் இருப்பதே எனது விருப்பம். அதனை உரிய அமைச்சரிடம் வலியுறுத்தியிருக்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
வவுனியா- நெடுங்கேணியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வின் பின்னர், ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் காதர் மஸ்தான் மேலும் கூறியுள்ளதாவது, “எல்.ஆர்.சி. காணிக்குரிய ஆவணங்களே அனுராதபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அது கடந்த காலங்களிலும் அனுராதபுர பிராந்திய காரியாலத்தால்தான் பார்க்கப்பட்டிருந்தது. இரண்டு வருடங்களிற்கு முன்பாக எனது கோரிக்கைக்கு அமையவே வட.மாகணத்திற்கு வந்தது.
மீண்டும் குறித்த விடயம் அவசரமாக அங்கு கொண்டுசெல்லப்பட்டமை தொடர்பாக உரிய அமைச்சருடன் பேசியிருக்கிறேன். சில செயற்பாடுகளை இலகுவாகவும் அவசரமாகவும் செய்வது தொடர்பாக சில காரணங்கள் அவரால் சொல்லபட்டது. அது பொருத்தமில்லாத காரணம் என கூறியிருந்தேன்.
வட.மாகாணத்திலேயே இந்த காரியாலம் இருக்கவேண்டும் என்று எனது கோரிக்கையை வலியுறுத்தியிருக்கிறேன். இங்கு இருக்கவேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பமும். எனவே மீண்டும் ஒருமுறை அமைச்சருடன் பேசவுள்ளேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

