வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுபவர் நல்ல குணநலன்களை கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. ஆனால் பொது மக்களின் எதிர்பார்ப்புக்கு நேர் எதிராக உள்ளது.
அண்ணா திராவிடர் கழக பொதுச் செயலாளர் திவாகரன் நேற்று மன்னார்குடியில் அவரது கட்சி சார்பில் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 17 பேர் அடங்கிய முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.
அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: –
வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுபவர் நல்ல குணநலன்களை கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. ஆனால் பொது மக்களின் எதிர்பார்ப்புக்கு நேர் எதிராக உள்ளது. தற்போது நடப்பது தேர்தல் திருவிழா போல் தெரியவில்லை. ஒரு கூட்டு வியாபாரமாக தான் தெரிகிறது. இதுவரை செய்யாததெல்லாம் இப்போது சொல்கிறார்கள். போட்டி போட்டு இலவசங்களை அறிவிக்கிறார்கள்.அரசாங்கம் எப்படி எல்லாம் மக்களிடம் இருந்து என்னென்ன வகையில் பணத்தை பிடுங்க முடியுமோ அந்த வகையில் மக்களிடம் இருந்து பணத்தை பிடுங்கி வருகிறார்கள்.
சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன் என எடுத்த முடிவு நல்ல முடிவு. தற்போது அவர் மீண்டும் ஜெயலலிதா ஆட்சி ஏற்பட வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதாக அங்கிருந்து எனக்கு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெயலலிதா இறந்த பிறகு இதுவரை நான் சசிகலாவை சந்திக்கவில்லை .இனிமேலும் நான் அவரை சந்திக்கப் போவது இல்லை.ஜெயலலிதா இருந்தபோதுகூட சசிகலாவுக்கு பாதுகாப்பு இல்லை. அவரை யார் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்கின்ற நிலை இருந்தது. இதனால் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அவரை போயஸ் கார்டனை விட்டு வெளியே வந்து கணவருடன் இருக்க சொல்லி வலியுறுத்தினேன். ஆனால் சில சுயநல சக்திகளால அது நடக்கவில்லை.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அரை மணி நேரத்தில் ஓ.பி.எஸ் தலைமையில் ஆட்சி அமைய நான் துணை நின்றேன். ஆனால் சிலரின் சுயநலத்தால் சசிகலா சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டதும் பின்னர் அவர் சிறைக்கும் செல்ல நேர்ந்தது. பின்னர் பெரும்பாடுபட்டு எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சர் ஆக்கினோம்.அவர் முதலமைச்சர் ஆவதற்கு நாங்கள் எந்த வகையில் உதவி புரிந்தோம் என்பது எங்களுக்கும் தெரியும். அவர்களுக்கும் தெரியும்.
அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க சசிகலா எடுத்த முடிவு அவராகவே எடுத்த முடிவுதான். இதற்கு யாரும் அவரை நிர்பந்திக்கவில்லை. டி.டி.வி.தினகரன் தனது சுயலாபத்திற்காக தன்னை விட சசிகலாவிற்கு அரசியல் செல்வாக்கு அதிகம் வந்து விடக்கூடாது என்றுதான் செயல்பட்டு வந்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வில் அவைத்தலைவர் மணலூர் சுந்தர்ராஜன், அமைப்புச் செயலாளர் கோவிந்தராஜன், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் பகுருதீன், திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் முருகேசன், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர் நாகராஜன், திருவாரூர் மாவட்ட செயலாளர் இளந்தமிழன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

