முஸ்லீம் மக்கள் இந்த அரசாங்கத்தை ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப்ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
பேட்டியொன்றில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.
உடல்களை அடக்கம் செய்யும் விவகாரம் எதிர்கால அரசியலில் எவ்வாறான தாக்கத்தை செலுத்தும் என்ற கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முஸ்லீம் மக்கள் இந்த அரசாங்கத்தை ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள் இந்த பயங்கரமான அதிர்ச்சியை அவர்கள் மறக்கமாட்டார்கள் என ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கம் கிட்டத்தட்ட முழு முஸ்லீம் சமூகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது என குறிப்பிட்டுள்ள ரவூப்ஹக்கீம் அவர்களை முஸ்லீம் மக்கள் மன்னிக்க முடியாத அளவிற்கு அரசாங்கம் சமூகத்தை மிகமோசமாக களங்கப்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் அந்த தீர்மானம் மிகவும் கடுமையான சொற்களுடன் கூடிய உள்ளடக்கத்தை கொண்டுள்ளது அரசாங்கம் தனது உடல்களை அடக்கம் செய்யும் கொள்கையை மாத்திரம் கைவிட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
ஆனால் அரசாங்கம் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கு இஸ்லாமிய ஒத்துழைப்பு நாடுகளின் ஆதரவை பெறுவதற்காகவே உடல்களை தகனம் செய்யும் கொள்கையை கைவிட்டது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதற்காகவே அரசாங்கம் அவ்வாறு செய்யப்பட்டது என்பது வெளிப்படையான விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சிறுபான்மையினத்தவர்களின் மனித உரிமை மீறல்கள் குறித்த அரசாங்கத்தின் அணுகுமுறையை இது வெளிப்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ள ரவூப் ஹக்கீம் எந்த வித விஞ்ஞானரீதியிலான ஆதாரங்களும் இல்லாமல் அவர்கள் தொடர்ந்தும் உடல்களை தகனம் செய்வதை வற்புறுத்தி வந்தனர் என குறிப்பிட்டுள்ளார்.

