ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இன்று சமர்ப்பிக்கப்படுகிறது திருத்தப்பட்ட நகல்

201 0

இலங்கை குறித்த இணைத் தலைமை நாடுகளால் தயாரிக்கப்பட்ட பிரேரணையின் திருத்தப்பட்ட நகல் இன்று திங்கட்கிழமை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ளது. உத்தியோகபூர்வமற்ற கலந்துரையாடலுக்காகவே இந்த திருத்தப்பட்ட நகல் யோசனைகள் சமர்ப்பிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு பேரவையின் கூட்டத் தொடரின் இறுதியில் – 22 ஆம் திகதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதிகளவு நிகழ்வுகளுக்கான நேர ஒதுக்கீட்டைச் செய்ய வேண்டியிருப்பதால், இலங்கை குறித்த வாக்கெடுப்பு எப்போது நடைபெறும் என்பதையிட்டு இதுவரையில் தீர்மானிக்கவில்லை என ஜெனிவா வட்டாரங்கள் தெரிவித்தன. இருந்தபோதிலும் 22 ஆம் திகதி வாக்கெடுப்பு இடம்பெறும் என இராஜதந்திர வட்டாங்கள் தெரிவித்தன.

உத்தியோகப்பற்றற்ற கலந்தாலோசனைகளுக்காக பிரேரணையின் திருத்தப்பட்ட நகல் இன்று பேரவையில் சமர்ப்பிக்கப்படவிருப்பதை உறுதிப்படுத்திய இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே, ‘பிரேணையை நாம் பரிசீலனை செய்து எமது எதிர்ப்பை வெளிப்படுத்துவோம்’ எனவும் குறிப்பிட்டார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு இத்தகவலை அவர் தெரிவித்தார்.

‘புதிய நகல் யோசனையின் அடிப்படையில் இணக்கப்பாடான தீர்மானம் ஒன்றுக்கான வாய்ப்புக்கள் உள்ளதா?’ எனக் கேட்கப்பட்டபோது, ‘இணக்கப்பாடான தீர்மானம் ஒன்று குறித்து அவர்கள் (இணைத் தலைமை நாடுகள்) முதலில் குறிப்பிட்டிருந்தார்கள்.

ஆனால், சில விடயங்கள் கடுமையானதாக இருந்தமையால் அவற்றை நாம் எதிர்த்தோம். நாம் எமது எதிர்ப்பை வெளிப்படுத்திய பின்னர் அவர்கள் தயாரித்த புதிய பிரேரணையே இன்று வெளியிடப்படுகின்றது.

அது எவ்வாறு அமைந்துள்ளது என்பதை அதனைப் பெற்றுக்கொண்ட பின்னரே எம்மால் சொல்ல முடியும். நாம் அதனை ஆராய வேண்டும். ஆனால், இணக்கத்துடனான தீர்மானம் ஒன்றுக்கான வாய்ப்புக்கள் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்’ என கொலம்பகே பதிலளித்தார்.

வாக்கெடுப்பின்போது அங்கத்துவ நாடுகளின் ஆதரவு கிடைக்குமா எனக் கேட்கப்பட்டபோது பதிலளித்த கொலம்பகே, ‘மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகரின் உரையின் போது பெரும்பாலான நாடுகள் இலங்கைக்கு ஆதவாக கருத்து வெளியிட்டிருந்தன.

இருந்தபோதிலும் வாக்கெடுப்பில் இந்த நிலைமை மாற்றமடையலாம். சக்திவாய்ந்த நாடுகள் அங்கத்துவ நாடுகளை இலங்கைக்கு ஆதரவளிக்காமலிருப்பதற்கான அச்சுறுத்தல்களைக் கொடுப்பார்கள்’ எனத் தெரிவித்தார்.

இதேவேளையில், இணக்கப்பாட்டுடான தீர்மானத்தைக் கொண்டுவருவதற்கு இணைத் தலைமை நாடுகள் இறுதிவேளையில் முயற்சித்த போதிலும் அதனை இலங்கை நிராகரித்துவிட்டது.

வாக்கெடுப்பில் இலங்கை தோல்வியடையும் என்பதை தெரிந்துகொண்டுள்ள போதிலும், வாக்கெடுப்பையே இலங்கை விரும்புவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

47 உறுப்பினர்களைக் கொண்டுள்ள மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு 10 நாடுகளின் ஆதரவு கிடைக்கும் என்றே முதலில் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் உடல் தகன விடயத்தில் இலங்கை எடுத்த புதிய நிலைப்பாட்டையடுத்து அது 15 ஆக அதிகரிக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இஸ்லாமிய நாடுகள் சிலவற்றின் ஆதரவை இதன் மூலம் இலங்கை பெற்றுள்ளது.

இந்தியா, ஜப்பான், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் நடுநிலை வகிக்கலாம் என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன. 29 நாடுகள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரேரணையின் திருத்தப்பட்ட வடிவம் இன்று சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அது குறித்த விவாதங்களும் பேரம் பேசல்களும் ஜெனிவாவில் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.