நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பதுபோல் கற்றறிந்ததுடன் ஒருதுறை சார்ந்த அனுபவம் வாய்ந்தவர்களால் நிர்வகிக்கப்படும் நாடு நிச்சயமாக முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும் என்பதற்கு கண்கண்ட உதாரணமாக கனடா விளங்கி வருகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்று, விரைவில் பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப், தனது புதிய அரசில் மந்திரிகளாகவும், தலைமை அதிகாரிகளாகவும் பணியாற்றும் நபர்களை தேர்வு செய்து அறிவித்து வருகிறார்.
டிரம்ப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பலரும் அவரைப் போலவே பிரபல தொழிலதிபர்களாகவும், பெரும் செல்வந்தர்களாகவும் உள்ளனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ள நிலையில், ஒருநாட்டின் மந்திரிசபையில் எத்தகையவர்கள் இடம்பெற வேண்டும்? என்பதற்கு கனடா நாட்டில் கடந்த ஆண்டு பொறுப்பேற்று கொண்ட மந்திரிசபையை நாம் நிச்சயமாக மேற்கோள் காட்டலாம்.
கனடா நாட்டின் ஆட்சிக்கு தலைமை தாங்கும் பிரதமர் பியெர் ஜேம்ஸ் டுருடேயூ, பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பட்டமும், ஆங்கில இலக்கியத்தில் இளநிலை பட்டமும் பெற்று முன்னர் பிரெஞ்சு மொழி மற்றும் கணித ஆசிரியராக பணியாற்றியவர்.
இவரது மந்திரிசபையில் சுகாதாரத்துறை மந்திரியாக இருப்பவர் ஒரு டாக்டர். போக்குவரத்துத்துறை மந்திரியாக இருப்பவர் முன்னாள் விண்வெளி வீரர். ராணுவத்துறை மந்திரியாக இருப்பவர் சீக்கிய மதத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்.
இளைஞர் நலத்துறை மந்திரி 45 வயதுக்கு உட்பட்டவர். விவசாயத்துறை மந்திரியாக இருப்பவர் விவசாயத்தை தொழிலாக செய்து வந்தவர். பொது பாதுகாப்பு மற்றும் அவசரக்கால உதவித்துறை மந்திரியாக இருப்பவர் சாரணர் இயக்கத்தில் பணியாற்றியவர்.
அறிவியல், நவீன கண்டுபிடிப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டுத்துறை மந்திரியாக பொறுப்பு வகிப்பவர் பொருளாதாரத்துறை வல்லுனராக பணியாற்றியவர். நிதித்துறை மந்திரி வெற்றிகரமான தொழிலதிபர். நீதித்துறை மந்திரி அந்நாட்டின் தலைமை அரசு வழக்கறிஞர்.

விளையாட்டுத்துறை மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மந்திரி பார்வையற்ற மாற்றுத் திறனாளி ஆவார். மீன்வளம், பெருங்கடல் மற்றும் கடற்படை மந்திரி அந்நாட்டின் மிகவும் புராதானமான பழங்குடியினத்தை சேர்ந்தவர்.
கனடா நாட்டின் குடியேற்ற பிரச்சனையை முன்னர் கடுமையாக விமர்சித்து வந்தவர் குடியுரிமைத்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார். மந்திரிசபையின் மொத்த எண்ணிக்கையில் சுமார் 50 சதவீதம் பேர் பெண்களாகவும், இவர்களில் பலர் அறிவியலாளர்களாகவும் உள்ளனர்.

