ஜெயலலிதாவின் மரணம் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பும் சந்தேகங்களுக்கு சம்பந்தப்பட்டவர்கள் பதில் கூற வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னையில் வார்தா புயல் பாதிப்பை தமிழக அரசு எதிர்கொண்ட விதம் பாராட்டுக்குரியது. புயல் காரணமாக சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமார் ஒரு லட்சம் மரங்கள் வேரோடு சாய்ந்து விட்டன. பா.ஜ.க. சார்பில் 2 லட்சம் மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளோம்.
ஜல்லிக்கட்டு நடத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இதுதொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் முறையான வாதத்தை மத்திய அரசு எடுத்து வைத்துள்ளது. ஆகவே சாதகமான தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கலாம்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பும் சந்தேகங்களுக்கு சம்பந்தப்பட்டவர்கள் பதில் கூறுவது கடமையாகும். அதே நேரம் மருத்துவ சிகிச்சை குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்புவது சரியல்ல.
தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் நடவடிக்கைகள் சிறப்பாக இருக்கிறது. பா.ஜ.க.வின் ஆன்மீக கொள்கையை அடியொற்றி அ.தி.மு.க. செயல்பட்டாலும் கூட்டணி பற்றி இப்போது கூற முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.

