பென்னாகரம் சட்டசபை தொகுதியில் பா.ஜனதா சார்பில் வீரப்பன் மகள் வித்யாராணி போட்டி?

291 0

பென்னாகரம் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா சார்பில் சந்தன கடத்தல் வீரப்பன் மகள் வித்யாராணி போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பிலும், கூட்டணி கட்சிகள் சார்பிலும் யாரெல்லாம் போட்டியிட போகிறார்கள். அதே போல தி.மு.க. சார்பிலும், தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பிலும் யாரெல்லாம் போட்டியிட போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் பா.ஜனதா சார்பில் வீரப்பனின் மூத்த மகள் வித்யாராணி போட்டியிட உள்ளதாக பரவலாக பேசப்படுகிறது. இவர் பா.ஜனதா இளைஞர் அணி மாநில துணை தலைவியாக இருந்து வருகிறார். இவர் கிருஷ்ணகிரியில் கணவர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

இதுகுறித்து வித்யாராணியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

நான் பா.ஜனதா கட்சியின் பென்னாகரம் தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளேன். எனது தந்தை வீரப்பனை மக்கள் அனைவரும் அறிவார்கள். குறிப்பாக பென்னாகரம் பகுதி மக்கள் எனது தந்தையுடன் பழகி வந்துள்ளார்கள். அதனால் பென்னாகரம் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளேன். நான் போட்டியிடுவது பற்றி கட்சி தலைமை முடிவு செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வீரப்பனின் மூத்த மகள் வித்யாராணி அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ஜனதா கட்சியில் இருந்து வருகிறார். அவரது தாய் முத்துலட்சுமி தி.மு.க. கூட்டணியில் உள்ள தமிழக வாழ்வுரிமை கட்சியில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.