தொலைத்தொடர்பு சேவை விரைவில் சீரடையும்

372 0

201612150643329495_telecommunications-service-quickly-recover-cellphone_secvpfவார்தா புயலால் தடைபட்ட தொலைத்தொடர்பு சேவை விரைவில் சீரடையும் என்று செல்போன் நிறுவனங்கள் அறிவித்து உள்ளன.

வோடோபோன் செல்போன் நிறுவனத்தின் தமிழ்நாடு வணிக மேலாளர் எஸ்.முரளி கூறியதாவது:-

தமிழ்நாட்டில் வார்தா புயல் காற்றால் செல்போன் டவர்கள் சேதமடைந்தன. இதனால் தொலைத்தொடர்பு சேவைகளுக்கு இடையூறு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முழுமையாக சேவையை தொடர்வதற்காக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

அதிகமாக பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களில் அதிக கவனம் செலுத்தி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். குறிப்பாக சென்னைக்கு அருகே புயல் கரையை கடந்த பகுதியில் அதிக சேதம் ஏற்பட்டது. இந்தப்பகுதியில் எங்களுடைய பொறியாளர்கள் தீவிரமாக பணியாற்றி விரைவாக சேவையை தொடர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குறிப்பிட்ட சில பகுதிகளில் எங்கள் சேவை தொடங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள பகுதிகளிலும் விரைவாக சேவையை கொண்டு வருவோம். சென்னையில் 21 அலுவலகங்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

ஏர்டெல் நிறுவன அதிகாரிகள் கூறும் போது, ‘வார்தா புயல் காரணமாக கடலுக்கு அடியில் அமைக்கப்பட்டிருந்த கண்ணாடி இழைத்தொடர்புகளும் சேதமடைந்தன. இதனால் இணையதளம் செயல்படும் வேகம் குறைந்துவிட்டது. வாடிக்கையாளர்களின் சிரமத்திற்கு வருந்துகிறோம். விரைவாக சீரமைத்து முழுமையான சேவையை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்’ என்றனர்.

ஏர்செல் நிறுவன அதிகாரிகள் கூறும் போது, ‘புயலால் எங்கள் நிறுவனத்தின் தொலைத்தொடர்பு சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனை விரைவாக சீர்செய்யும் பணியில் எங்கள் குழுவினர் ஈடுபட்டு உள்ளனர்’ என்றனர். முழுமையான சேவையை விரைவில் கொண்டு வர தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டு உள்ளது.