பெற்றோர்களால் வளர்க்க முடியாத நிலையில் கடந்த 3 ஆண்டில் 51 குழந்தைகள் ஒப்படைப்பு

271 0

பெற்றோர்களால் வளர்க்க முடியாத நிலையில் மதுரையில் கடந்த 3 ஆண்டில் 51 குழந்தைகள் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன.

பெற்றோர்களால் வளர்க்க முடியாத குழந்தைகளை, மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைத்து விடலாம் என மாவட்ட குழந்தைகள் நலக்குழு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. மேலும், அது தொடர்பாக போலீசாருடன் இணைந்து பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றது.

இருப்பினும் மதுரையில் ஆங்காங்கே பெண் சிசு கொலை அரங்கேறி வருவது வருத்தமளிக்கும் வகையில் உள்ளது.

இதுகுறித்து குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பாண்டியராஜா கூறுகையில், கடந்த 2018-ம் ஆண்டில் 7 பெண் குழந்தைகளும், 2019-ம் ஆண்டில் 11 பெண் குழந்தைகளும், 6 ஆண் குழந்தைகளும் என மொத்தம் 17 குழந்தைகள் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அதுபோல், கடந்த 2020 வருடத்தில், கூடுதல் விழிப்புணர்வு அளிக்கப்பட்டதன் விளைவாக அந்த இரண்டு வருடங்களை காட்டிலும் அதிகமாக, பெற்றோர்களால் வளர்க்க முடியாத 27 குழந்தைகள், மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு, பல்வேறு காப்பகங்களில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

குழந்தைகளை பாதுகாக்க குழந்தைகள் நலக்குழு, குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சைல்டு லைன் உள்ளிட்ட அமைப்புகள் இருக்கின்றன. எனவே, பெண் சிசு கொலைகளை தடுக்க அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்பட்டு இதுபோன்ற சம்பவங்களை தடுக்க வேண்டும்.

பெற்றோர்களால் வளர்க்க முடியாத நிலையில் மதுரையில் கடந்த 3 ஆண்டில் 51 குழந்தைகள், குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன என்றார்.