முகாமையாளரை தாக்கி சாணம் கரைத்து ஊற்றிய எண்மர் விளக்கமறியலில்

187 0

நுவரெலியா, மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட ஒல்டன் தோட்ட முகாமையாளரைத் தாக்கி, சாணம் கரைத்து ஊற்றிய குற்றச்சாட்டில் கைதான ஏழு பெண்கள் உட்பட எட்டுப்பேரையும் எதிர்வரும் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹற்றன் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

ஒல்டன் தோட்ட முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளரை இடமாற்றம் செய்யுமாறு கோரி, ஒல்டன் மேற்பிரிவு கீழ்பிரிவு, கிங்கோரா, நிலாவத்தை பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருவதுடன் நேற்று ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

தோட்டத் தொழிலாளர்களுக்கான 1,000 ரூபா சம்பள உயர்வை வலியுறுத்தி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், கடந்த 5ஆம் திகதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.

இந்நிலையில், ஒல்டன் தோட்டத் தேயிலை தொழிற்சாலையிலிருந்து பொதிசெய்யப்பட்ட தேயிலை தூள்களை தோட்ட நிர்வாகம், கடந்த 3ஆம் திகதி எடுத்துச்செல்ல முற்பட்டபோது, அதனை வெளியேற்றவிடாது தொழிலாளர்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

இதன்போது, தோட்ட முகாமையாளர் பெண் தொழிலாளி ஒருவரைத் தாக்கிய நிலையில் அந்தப் பெண், மஸ்கெலியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் தோட்ட முகாமையாளரையும், உதவி முகாமையாளரையும் இடமாற்றம் செய்யக் கோரி, கடந்த 3ஆம் திகதி முதல் தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தோட்ட நிர்வாகமானது, 16 ஆம் திகதி வெளியாரை அழைத்துவந்து கொழுந்து பறிக்கச் செய்ய முற்பட்டபோது, தொழிலாளர்கள் வெளியாரை விரட்டியடித்ததுடன், தோட்ட முகாமையாளரின் விடுதிக்குச் சென்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது தோட்ட முகாமையாளரும், உதவி முகாமையாளரும் தொழிலாளர்களால் தாக்கப்பட்டனர் எனக் கூறி, மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதுடன், முகாமையாளர்கள் இருவரும் கிளங்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

முகாமையாளர்களின் முறைப்பாட்டுக்கமைய ஒரு ஆண் தொழிலாளியும், 7 பெண் தொழிலாளர்களையும் மஸ்கெலியா பொலிஸார் கைதுசெய்ததுடன் நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.

இதன்போது இந்த எட்டுப்பேரையும் எதிர்வரும் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹற்றன் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டார்.