மெக்சிகோவில் கொரோனாவை தடுக்க போலி தடுப்பூசி தயாரித்த 6 பேர் கைது

256 0

மெக்சிகோவில் கொரோனாவை தடுக்க போலி தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

கொரோனாவின் மோசமான பாதிப்புக்கு ஆளான நாடுகளில் ஒன்று மெக்சிகோ. இந்த நாட்டில் இதுவரை 20 லட்சத்திற்கும் மேற்பட்டோரை கொரோனா வைரஸ் பெருந்தொற்று தாக்கி இருக்கிறது. 1 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.

அந்த நாட்டில், நியூவோ லியோன் மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக போலி தடுப்பூசி தயாரிப்பதாக தெரிய வந்தது. இது குறித்த தகவல் கிடைத்ததின்பேரில் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் சிவில் பாதுகாப்பு அமைச்சகம் அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. போலி தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து அந்த அமைச்சகம் கூறுகையில், “நியூவோ லியோன் மாகாணத்தில் போலி தடுப்பூசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இத்தகைய தடுப்பூசிகளை போட்டுக்கொள்வது பொது சுகாதாரத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. அரசு ஆஸ்பத்திரிகளிலும், மையங்களிலும் மட்டும்தான் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்” என தெரிவித்தது.

கொரோனாவுக்கு எதிராக மெக்சிகோவில் போலி தடுப்பூசி தயாரிக்கப்பட்டிருப்பது, உலகையே அதிர வைத்துள்ளது.