மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிரந்தர தலைவர் ஆனார் கமல்ஹாசன்

194 0

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிரந்தர தலைவராக கமல்ஹாசன் செயல்படுவார் என்று அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நடிகர் கமல்ஹாசன் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந்தேதி மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். இதுவரை செயற்குழு மற்றும் நிர்வாகிகள் கூட்டம் மட்டுமே நடத்தி வந்த கமல்ஹாசன் முதல்முறையாக பொதுக்குழு கூட்டத்தை சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நேற்று நடத்தினார். கூட்டத்திற்கு கமல்ஹாசனே தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் கலந்துகொள்ள வருகை தந்த கமல்ஹாசனுக்கு மேள-தாளம், சிங்காரி மேளம், பறையிசை முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள 650 பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்தவர்களின் செல்போன்கள் கூட்டம் நடத்தும் பொறுப்பாளர்களால் பெறப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

* கமல்ஹாசன் இன்று முதல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிரந்தர தலைவராக செயல்படுவார்.

* தேர்தல் கூட்டணி அமைப்பது, தனித்துக்களம் காண்பது, வேட்பாளர் தேர்வு, தேர்தல் வியூகம், தேர்தல் பிரசாரம் உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் தலைவர் கமல்ஹாசனுக்கு அளிக்கப்படுகிறது.

* தலைவர் கமல்ஹாசனை தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்க செய்வது கட்சியினர் ஒவ்வொருவரின் கடமை.

* 2021 புதுச்சேரி சட்டமன்ற தேர்தலிலும் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்களை பெருவெற்றி பெறச்செய்வது.

* கிராம சபைகளை நடத்தினால் தங்களது ஊழல்களும், நிர்வாகக் குளறுபடிகளும் அம்பலப்பட்டு விடும் எனும் பயத்தால் கொரோனாவை காரணம் காட்டி கிராம சபைகளை நடத்தாமல் இருக்கும் தமிழக அரசின் செயலை மக்கள் நீதி மய்யம் கண்டிக்கிறது.

* 8 வழிச்சாலை போன்ற விவசாயத்தை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் தமிழ் மண்ணில் அனுமதிக்கக்கூடாது.

* இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்க மத்திய அரசும், மாநில அரசும் ஆவன செய்ய வேண்டும்.

* நாட்டையே அதிரச்செய்த பொள்ளாச்சி பாலியல் வழக்கின் விசாரணை விரைந்து நடத்தப்பட வேண்டும்.

* இந்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளை எப்படியாவது திணித்து விட வேண்டும் எனும் பா.ஜ.க. அரசின் முயற்சிகளை மக்கள் நீதி மய்யம் கண்டிக்கிறது. மொழித்திணிப்பு எந்த வேடமிட்டு வந்தாலும் மக்கள் நீதி மய்யம் முழுவீச்சுடனும் ஆற்றலுடனும் எதிர்க்கும்.

* டாஸ்மாக் கடைகள் இருக்கும் ஊர்தோறும் தரமான இலவச குடிநோயாளிகள் மறுவாழ்வு மையங்கள் உடனே திறக்கப்பட வேண்டும்.

* மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்திற்கான காரணம், அதனைத்தொடர்ந்து கொடநாடு எஸ்டேட்டில் அடுத்தடுத்து நிகழ்ந்த மர்ம மரணங்களின் பின்னணி ஆகியவற்றின் உண்மைகளை வெளிக்கொண்டு வரவேண்டும்.

* ஒரு வாக்குக்கு ரூ.2,000 முதல் ரூ.10,000 வரை கொடுத்து வாக்குகளைப் பெற திராவிடக்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் வருகின்றன. எனவே, தமிழக தேர்தல் ஆணையம் விழிப்புடன் செயல்பட்டு வாக்குகளுக்கு பணம், பரிசுப்பொருட்கள் வினியோகம் செய்வதை தடுத்து நேர்மையான நியாயமான தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

* 7 தமிழர் விடுதலையில் தமிழக அரசு அனைத்துக்கட்சிகளையும் ஒருங்கிணைத்து போதிய அழுத்தம் கொடுக்க வேண்டும்.

* தமிழக மீனவர்களின் தொழிலுக்கும், உயிருக்கும், உடைமைக்கும் நிரந்தர பாதுகாப்பை ஏற்படுத்தி தமிழக மீனவர்களை காக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் உண்டு. அதை செய்யத்தவறிய மத்திய, மாநில அரசை மக்கள் நீதி மய்யம் கண்டிக்கிறது.

* தமிழக அரசு வாங்கியுள்ள கடன்களை பற்றிய வெள்ளை அறிக்கையை தேர்தலுக்கு முன்னரே மக்கள் மன்றத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்பது உள்பட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொதுக்குழு கூட்டத்திற்கு பின்னர், பிற்பகலில் மக்கள் நீதி மய்யத்தின் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.