நான் கேட்கும் கேள்விகள் மக்களால் எனக்கு வழங்கப்பட்டு கேட்க வைக்கப்படும் கேள்விகள்

244 0

பாதுகாப்பு படைகளினால் அபகரிக்கப்பட்ட காணிகள் தொடர்பில் சாணக்கியன் எம்பி பிரதமரிடம் கேள்வி எழுப்பிய போது தேசிய பட்டியல் எம்பி சுரேன் ராகவன் குறுக்கீடு செய்து, அவரை கேள்வி எழுப்புவதை தடுக்க முயற்சித்த சம்பவம் இன்று (10) நாடாளுமன்றில் இடம்பெற்றது.

இதன்போது கோபமடைந்த சாணக்கியன்,

பல உறுப்பினர்கள் இடைமறித்து என்னை கதைக்க விடாமல் செயற்படுகின்றனர். இங்கே நான் கேட்கும் கேள்விகள் மக்களால் எனக்கு வழங்கப்பட்டு கேட்க வைக்கப்படும் கேள்விகள். இவற்றை நான் இங்கு கேட்பதற்கான முழு உரிமையும் உண்டு. என்னை குழப்பாதீர்கள்.

சுரேன் ராகவன் தயவு செய்து உங்களுடைய வேலை எதுவோ அதனை செய்யுங்கள். நீங்கள் எனக்கு எதிராக கதைக்க விடாமல் செய்வதற்கு நீங்கள் பிரதமர் அல்ல, நான் அவரிடமே இக்கேள்விகளை தொடுகின்றேன்.

அவர் அதற்கு பதில் சொல்லட்டும் நீங்கள் சும்மா இங்கு கூச்சலிட்டு நான் கேட்க வந்த விடயத்தை கேட்க முடியாதபடி செய்யாதீர்கள்.

இங்கு நான் பிரதமருடன், கதைப்பது சில நேரங்களில் ஒரு வருடங்களுக்கு ஒரு முறையாவது கிடைக்கும் சந்தர்ப்பமாக இருக்கும். அப்படி இருக்கையில் இவர்கள் வேண்டும் என்றே குழப்பினால் என்னால் எனது மக்களின் உரிமைகள் சம்மந்தமான பிரச்சினைகளை எவ்வாறு இங்கு எடுத்துரைக்க முடியும்?.

இது தேசியப் பட்டியல் மூலம் தெரிவு செய்யப்பட்ட சுரேன் ராகவனுக்கு விளங்கவில்லை. நான் தேசிய பட்டியலில் வரவில்லை. மக்களினால் தெரிவு செய்யப்பட்டவன். தேசியப்பட்டியல் மூலம் வந்தவர் அதுவும் தமிழர் குழப்பிக் கொள்வது வேதனைக்குரிய விடயம்.

அவரது அரசியல் நடவடிக்கைகளை இதன் மூலம் அபிவிருத்தி செய்யலாம் என்று யோசிக்கிறார். நாங்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டு தான் வந்தோம் என்பதனை அவர் மனதில் கொள்ளவேண்டும் என்றார்.