தீவுப்பகுதியில் மருத்துவர்கள், தாதியர், சுகாதார ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவை வழங்குங்கள்

198 0

யாழ்.தீவுப்பகுதி வைத்தியசாலைகளில் கடமையாற்றும் மருத்துவர்கள், தாதியர், ஏனைய சுகாதார ஊழியர்களுக்கு விசேட ஊக்குவிப்புக் கொடுப்பனவொன்றை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம். பி.யான எஸ்.ஸ்ரீதரன் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாய் மூல விடைக்கான வினாவின் போதே ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளேயிடம் இக்கோரிக்கையை ஸ்ரீதரன் எம்.பி. விடுத்தார்.

இது தொடர்பில் ஸ்ரீதரன் எம்.பி. மேலும் கூறுகையில்,

யாழ்ப்பாணத்திலுள்ள தீவுகளுக்கான வைத்தியசாலைகளுக்கு மருத்துவர்கள் நியமிக்கப்படுவதில்லை. இங்கு பணி புரியும் மருத்துவர்கள், தாதிகள், ஏனைய சுகாதார ஊழியர்கள் பல்வேறு சிரமங்கள், நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே பணி புரிகின்றனர். இவர்கள் கடல் கடந்து சென்றே கடமை புரிகின்றனர். இவர்கள் தீவுப்பகுதிகளில் தங்கியிருந்து பணி புரிவதானால் வாடகை இடங்களைப் பெறுவதற்கு சம்பளங்கள் போதுமானதல்ல. எனவே இவர்களுக்கு விசேட ஊக்குவிப்புக் கொடுப்பனவொன்றை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதற்குப் பதிலளித்த ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே,யாழ். தீவுப்பகுதிகளிலுள்ள வைத்தியசாலைகள் மாகாண சபையின் அதிகாரத்தின் கீழ் இருப்பதனால் மாகாணசபைதான் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

எனினும் இதனை ஏற்க மறுத்த ஸ்ரீதரன், யாழ். தீவுப்பகுதிகளிலுள்ள வைத்தியசாலைகள் மாகாண சபை அதிகாரத்தின் கீழ் இருந்தாலும் நியமனங்களை வழங்குவது மத்திய அரசுதான். அத்துடன் மாகாண சபைகளுக்கு அதிகாரங்களும் கிடையாது. அப்படி மாகாண சபை தான் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டுமானால் நீங்கள் அதற்குரிய அதிகாரத்தை மாகாண சபைக்கு வழங்க வேண்டும் அல்லது ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்க வேண்டும் என்றார்.