பின்லாந்து தமிழ் இளையோர் அமைப்பு பிரதிநிதிகள் பின்லாந்தின், தெற்காசியாவிற்கான தூதுவர் திரு.ஹரி கமராய்னன் அவர்களை சந்தித்தனர்.

336 0

இன்றைய தினம்(29/01/2021) பின்லாந்து தமிழ் இளையோர் அமைப்பு பிரதிநிதிகளும், பின்லாந்து தமிழர்பேரவை பிரதிநிதியும் பின்லாந்தின், தெற்காசியாவிற்கான தூதுவர் திரு.ஹரி கமராய்னன் அவர்களையும், அவருடைய உதவியாளர் அன்னிக்கி ஹக்கலா வையும், KIOS என்னும் அரசசார்பற்ற நிறுவனத்தின் பிரதிநிதியான,ஹதியா இல்போலா அவர்களையும் சந்தித்தனர்.

பின்லாந்தின் வெளிநாட்டமைச்சின் செயலகத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது. தமிழர் தாயகமான வடகிழக்கு மாகாணங்களில் , சிறிலங்கா அரசினால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தாங்கள் கலந்துரையாட விரும்புவதாகவும், பிரசல்ஸ்ஸில் நடைபெறவுள்ள ஐரோப்பிய ஒன்றிய கூட்டத்தின் முன்னர் இந்தச் சந்திப்பு இடம்பெறவேண்டும் எனவும். தெற்காசிய நாடுகளிற்கான பின்லாந்து தூதுவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதற்கமைவாக இன்றைய சந்திப்பு இடம்பெற்றது. வடகிழக்கில் தற்போதுள்ள நிலைமை தொடர்பாக , விரிவாகவும் ஆதாரபூர்வமாகவும் விளக்கமளித்த இளையோர் அமைப்பு, பேரவை பிரதிநிதிகள் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பான ஆவணங்கள் அடங்கிய கோவை ஒன்றை தூதுவரிடம் கையளித்தனர். மேலும் சிறிலங்கா அரசு புரிந்த தமிழினப் படுகொலையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் விசாரணை செய்து தமிழர்களிற்கு நீதி வழங்குவதற்கு பின்லாந்து அரசு எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் , கோரிக்கை முன்வைத்தனர். இந்த விடயம் தொடர்பாக , தெற்காசிய தூதுவர், ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள தமது கொள்கை வகுப்பாளர்களிடம் இந்த ஆவணங்களை சேர்ப்பிப்பதாக உறுதியளித்தார்.

குறிப்பு . பின்லாந்தின் தெற்காசிய தூதுவர் தனது Twitter பக்கத்தில் இன்றைய சந்திப்பு தொடர்பாக குறிப்பிட்டுள்ளார்.