இலங்கை குறித்த ஐ.நா. ஆணையாளரின் அறிக்கைக்கான பதில் இன்று கையளிக்கப்படும் – தினேஸ்

295 0

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிச்செலே பச்செலெட்டினால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கைக்கு பதிலளிக்கும் முழுமையான ஆவணம் இன்று (புதன்கிழமை) ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் கையளிக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் முழுமையாக கலந்துரையாடப்பட்டுள்ளது என்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பில் முன்வைத்துள்ள அறிக்கையில் பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவை அனைத்துக்கும் இன்று கையளிக்கப்படவுள்ள ஆவணத்தில் பதிலளிக்கப்படுவதாகவும் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கைக்கான பதில் அடங்கிய ஆவணம் நேற்று மாலை கையளிக்கப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர், அட்மிரல் பேராசிரியர் ஜயனாத் கொலம்பகே நேற்று தெரிவித்திருந்தார்.

எனினும் குறித்த அறிக்கை நேற்றையதினம் கையளிக்கப்படாத நிலையில், இன்றைய தினமே கையளிக்கப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்தார்.

46ஆவது ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரினால் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கையில், இலங்கை குறித்த விசாரணையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பரிந்துரைப்பதன் மூலம், உலகளாவிய அதிகார வரம்பின் கீழ் விசாரணைகள் மற்றும் வழக்குகளை நிறுவுதல் மற்றும் சர்வதேச குற்றங்களில் சிக்கியுள்ள இலங்கை அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தல் உள்ளிட்ட காட்டமான தீர்மானங்கள் மற்றும் முடிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.