கைதி எண் 253 – புகழேந்தி தங்கராஜ்

542 0

pugalenthi_tangarajஎட்டுத் திசையும் பறந்து திரிகுவை
ஏறி அக் காற்றில் விரைவொடு நீந்துவை
மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்கும் இவ்
வானொளி என்னும் மதுவின் சுவையுண்டு
விட்டு விடுதலை ஆகி நிற்பாய் -இந்தச்
சிட்டுக்குருவியைப் போலே…

இயற்கையோடு ஒன்றிப் பறந்து உணர்ந்து நெகிழ்ந்து எழுதிய மகாகவி பாரதியின் பிறந்தநாள் இன்று (டிசம்பர் 11). இந்தத் தேதியை பாரதியை நேசிக்கும் எவரும் மறந்துவிடுவதில்லை.

பிறந்த நாளான டிசம்பர் 11-ஐக் காட்டிலும் பாரதியின் வாழ்வில் மிக முக்கியமான நாளாக இருந்திருக்கிறது டிசம்பர் 14. இவ்வளவு காலமாக இதை நான் அறிந்திருக்கவில்லை. கவிஞர் சிற்பியின் (சிற்பி பாலசுப்பிரமணியம்) ‘பாரதி – கைதி எண் 253’ நூலைப் படித்தபிறகே இந்த உண்மை உறைக்கிறது.

டிசம்பர் 14 1918ல் 25 நாள் சிறைவாசத்துக்குப் பிறகு பாரதி விடுதலை ஆன நாள். அந்தப் பாட்டுப் பறவை சிறைக்கூடத்தை விட்டு விடுதலை ஆன நாள். ‘இவ்வுலகம் இனிது இதிலுள்ள வான் இனிமையுடையது காற்றும் இனிது தீ இனிது நீர் இனிது நிலம் இனிது’ என்பதை பாரதி மீண்டும் உணர்ந்த நாள்.

‘பாரதி – கைதி எண் 253’ நூலை என்னிடம் கொடுத்து ‘இது உங்களுக்கு நிச்சயமாகப் பிடிக்கும்…. படித்துப் பாருங்கள்’ என்று சொன்னவர் கவிதா பதிப்பகம் சொக்கலிங்கம். பாரதி மீது நான் வைத்திருக்கும் உயரிய மதிப்பை உணர்ந்தவர் அவர்.

புத்தகம் கைக்கு வந்தபிறகு கூட சுமார் இரண்டு வாரங்கள் அதைப் படிக்க நேரம் கிடைக்கவில்லை எனக்கு! சென்றமாதம் ஒரு ரயில் பயணத்தின்போது அதைப் படிக்க ஆரம்பித்தவன் ஈரோடு போய்ச் சேர்வதற்குள் மூன்று முறை மீண்டும்மீண்டும் படித்தேன். ‘படிக்க ஆரம்பித்தால் முடித்துவிட்டுத்தான் வேறு வேலை பார்க்க முடியும்’ என்பார்களே – அப்படியொரு அனுபவம் – ‘பாரதி – கைதி எண் 253’.

‘என் இலக்கிய முன்னோடி ஜெயகாந்தன் ‘இந் நூலை அல்லவா திரைப்படம் ஆக்க வேண்டும்’ என்று வியந்து பேசினார்’ என்று கவிதா பதிப்பகம் வெளியிட்டுள்ள இரண்டாம் பதிப்பின் முன்னுரையில் சிற்பி குறிப்பிட்டிருக்கிறார். ஜெயகாந்தன் சொன்னது எவ்வளவு உண்மை என்பதைஇ நூலின் ஒவ்வொரு பக்கமும் நிரூபிக்கிறது.

பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான கருத்துக்களைத் தொடர்ந்து வெளியிட்டு வந்த ‘இந்தியா’ பத்திரிகையின் சட்டப்பூர்வ ஆசிரியர் சீனிவாசன் 1908ல் கைது செய்யப்படுகிறார். உண்மையான ஆசிரியரான பாரதியும் கைதுசெய்யப்பட்டுவிடுவார் என்கிற நிலை. பிரிட்டிஷ் அரசின் வலையிலிருந்து தப்பிக்க வ.உ.சி. உள்ளிட்ட நண்பர்களின் வற்புறுத்தலால் புதுச்சேரி போய்விடுகிறார் பாரதி. (புதுச்சேரி அப்போது பிரெஞ்சுக் காலனி.)

புதுச்சேரி பிடித்திருந்தாலும் ‘ஹோம் சிக்’ வதைத்துக் கொண்டே இருக்கிறது பாரதியை! எப்படியாவது தமிழகத்துக்குத் திரும்பிவிடத் துடிக்கிறார். 1918 நவம்பர் 20ம் தேதி புதுவையிலிருந்து புறப்பட்டு விடுகிறார். இந்தியப் பகுதிக்குள் நுழைந்தவர் கடலூருக்கு அருகே கைதுசெய்யப்படுகிறார். 4 நாள் கடலூர் துணைச் சிறைக்கூடத்தில் வைக்கப்பட்டிருந்தவர் 24ம் தேதி கடலூர் மாவட்ட தலைமைச் சிறைக்கூடத்துக்கு மாற்றப்படுகிறார். 25 நாள் சிறைவாசத்துக்குப் பின் டிசம்பர் 14ம் தேதி விடுதலை செய்யப்படுகிறார். அது 37வது வயதில் அவர் அடியெடுத்துவைத்த நான்காவது நாள்.

25 நாள் சிறைவாசத்தின் போதிருந்த பாரதியின் மனநிலையை சிற்பியின் சரளமான எளிமையான கவிதை நடை சுவாரஸ்யமாக விவரிக்கிறது. பல இடங்களில் நகைச்சுவை இழையோடுகிறது. சில இடங்களில் நம் கன்னத்தில் நம் கண்ணீர் இழையோடுகிறது.

திரையுலகுக்கு ஒரு சிவாஜியைப் போல் இலக்கிய உலகுக்குக் கிடைத்திருக்கிற சிவாஜி – சிற்பி. பாரதியாகவே மாறிவிடுகிறார் மனிதர். இலக்கிய வரலாற்றில் இன்னொரு கவிஞனை அப்படியே உள்வாங்கிக்கொண்டு அவனாகவே உருமாறி இப்படியொரு கவிதை நூலை எழுதிய வேறு கவிஞர் எவராவது இருக்கிறார்களா என்பது தெரியவில்லை.

அந்த 25 நாட்களில் சிறைக்கம்பிகளுக்குப் பின்னிருந்து பழைய நிகழ்வுகளையும் நினைவுகளையும் கனவுகளையும் உணர்வுகளையும் பாரதி நினைத்துப் பார்ப்பதாக விரிகிறது – கைதி எண் 253. பாரதியின் கவிதைகளையும் சிந்தனைகளையும் பொருத்தமான இடத்தில் பொருத்தி வியக்க வைக்கிறார் சிற்பி. இது சிற்பி எழுதியதா பாரதி எழுதியதா என்கிற சந்தேகமே வந்துவிடுகிறது பல இடங்களில்!

இந்த நூல் நம் இதயத்துக்குள் நுழைந்து சிம்மாசனம் போட்டு அமர்ந்துகொள்கிறதென்றால் இந்த வெற்றிக்கு ஒரே காரணம் – பாரதியில் முழுமையாகக் கரைந்துபோய்விடுகிற மனிதராக சிற்பி இருப்பதுதான்! IDOL, IDEAL இரண்டுக்கும் இடையிலான வித்தியாசத்தை பாரதி வாயிலாக சிற்பி சுட்டிக் காட்டுகிறபோது எந்த அளவுக்கு அந்த மகா கவிக்குள் இவர் ஆழ்ந்து போயிருக்கிறார் என்பதை உணர முடிகிறது.

‘எதையும் பிம்பமாக்குவதில் (IDOL)
எனக்குச் சம்மதமில்லை…
பிம்பங்கள் விக்கிரகங்களாகும்…
சடங்கும் சம்பிரதாயங்களும்
அதன் சாபல்யத்தைக் குறைக்கும்….
நான் லட்சிய மனிதன் (IDEAL)……
லட்சியங்கள் விண்மீன்கள்….
ஒன்றை அடைந்தால் இன்னொன்று அழைக்கும்…
தேக்கம் அல்ல
இயக்கம் என் வாழ்வியல்….’

இது காந்தி முதல் பிரபாகரன் வரை உண்மையான போராளிகள் பலரும் எடுத்துரைத்த உண்மைப் பொருள். ‘என் இலக்கைப் புரிந்துகொள்ளாமல் என்னை எப்படிப் புரிந்துகொள்வாய்’ என்பதிலுள்ள ஒவ்வொரு வார்த்தையும் ஆழமானது. பாரதி அதைத்தான் முன்மொழிகிறான் சிற்பி வழிமொழிகிறார். ‘எனக்கவனே குரு…. அவன் எழுத்தே வேதம்….. வார்த்தை சட்டம்…. கவிதை சத்தியம்’ என்று பிரகடனம் செய்வதற்கான சகல தகுதியும் இருக்கிறது சிற்பிக்கு!

விடுதலை ஆவதற்கு 4 நாட்களுக்குமுன் 36 வயது முடிந்து 37 தொடங்குகிறது பாரதிக்கு!
‘பிறந்த நாட்கள்
வயதை ஞாபகப்படுத்தும் கசப்பான இனிப்புகள்…
முப்பத்தாறா என் வயது?
மூன்றாயிரம் ஆண்டு
மூத்த பண்பாட்டின் தொடர்ச்சி நான்’ என்று பாரதியின் குரலாக சிற்பியின் குரல் ஒலிக்கும்போதுஇ அதிலிருக்கும் பாரதித்தனம் நம்மை நிமிர வைக்கிறது.

‘மனச்சோர்வும் உடற்சோர்வும்
சில காலமாகப் பாடாய்ப்படுத்தும் எனை!
ஆணிக்கால் தொல்லையை
சிப்பாய் நடையில்
தெரியாமல் மறைத்திருப்பேன்…
பூஞ்சை உடம்பை
கோட் அணிந்து மறைத்திருப்பேன்…’
பாரதி என்கிற மகாகவியைச் சிற்பமாகவே சிற்பி செதுக்கச் செதுக்க இந்த யுகத்தின் மகாகவிஞன் நம் கண்முன்னால் துல்லியமாக ஒளிர்ந்துகொண்டே இருக்கிறான்.

‘இந்த மனிதர் ஒரு பொக்கிஷம் இதை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று காந்தி எச்சரித்தபிறகுகூட அந்தப் பொக்கிஷத்தை நாம் போற்றிப் பாதுகாக்கவில்லை. சிற்பியைப் படிக்கையில் அந்தக் குற்ற உணர்ச்சி பலமடங்காகிவிடுகிறது.

இன்று பாரதியை அவனது எழுத்துக்காகவும் சிந்தனைக்காகவும் விடுதலைவேட்கைக்காகவும் இதயத்தில் ஏந்திக் கொண்டிருக்கிறோம் ஒவ்வொருவரும்! சமூகம் சார்ந்த இலக்கியத்தில் அவனுக்குத் தரப்பட்டிருப்பது ஈடு இணையற்ற உன்னதமான இடம். ஆனால் அந்த மகாகவிஞன் உயிருடனிருந்தபோதுஇ எங்கே வைத்திருந்தோம் அவனை? சிற்பி அதை விவரிக்கையில் உடைந்துபோகிறது மனது!

‘படிக்க வாய்ப்பற்றுக் கிடக்கும் கவிகளை
தேடிக் கரையான் அரிக்குமோ!
பறக்கக் கம்பம் இன்றி
சீவன் இழந்து
என் கவிதைக்கொடி மரிக்குமோ’
என்றொலிக்கிறது பாரதியின் தன்னிரக்கம் சிற்பியின் வாயிலாக!

‘எழுதிக் குவித்தேன் கவிதைகள் கதைகள்
இன்னும் அவை வெளிச்சத்தைப் பார்க்கவில்லை!
தூங்குகின்றன காகிதங்களில்
குகைக்குள் உறங்கும் வேங்கைகள் போல்….
மாய வடிவெடுத்து மனங்களுக்குள் குடிபோக
என் எழுத்துக்கள் தேவதைகள் இல்லை!
அச்சில் வராமல் யார் அதனை வாசிப்பார்?’
என்கிற கேள்வி நம் செவுளில் அறைகிறது.

காலத்தால் அழியாத தன்னுடைய கவிதைகளைப் புத்தக வடிவில் கொண்டுவரக்கூட முடியவில்லை அந்த மகா கவிஞனால்! கடைசியில் ‘கண்ணம்மா’ என்று பாரதி போற்றுகிற காதல்துணைவி செல்லம்மாதான் கணவனின் கவிதைகளை முழுமையான புத்தகமாகக் கொண்டு வந்தாள் அவனது மறைவுக்குப் பிறகு!

பாரதியை மிதித்த உண்மையான யானை விலங்கல்ல! அந்த மகாகவிஞனை அறியக்கூட இயலாத நிலையிலிருந்த சம காலத் தமிழரின் அறியாமை.

‘கனக்கும் செல்வம் தா நூறு வயதைத் தா’ என்றெல்லாம் பாரதி வேண்டியது மணக்குள விநாயகரிடமா….
இல்லை…
உண்மையில் சமகாலச் சமூகத்திடம்தான் வேண்டுகிறான் மகாகவி.
இருக்கையில் அவனைக் காலில் போட்டு மிதித்துவிட்டு இறந்தபின் மலர்வளையம் வைக்கிற ஒரு பொய்மனிதச் சமூகமாகவே இன்று வரை உண்டு உயிர்த்திருக்கிறோம் நாம்! நம்முடைய காலடியில் நசுங்கிக் கொண்டிருக்கிறார்கள் மெய்யான அறிவாளிகள்!

வ.உ.சி. குறித்த தனது பார்வை தனக்கே பொருந்துமென்பதை பாரதி உணர்ந்திருந்தானோ இல்லையோ நமக்கு அதை உணர்த்துகிறது சிற்பியின் தமிழ்.

‘வேளாளன் சிறை புகுந்தான் தமிழகத்தார்
மன்னனென மீண்டான்’ என்றே
கேளாத கதை விரைவில் கேட்பாய் நீ!’
என்று சிறைசென்றபோது வ.உ.சி.யை வாழ்த்தியவன் பாரதி. சிறையிலிருந்து வெளிவந்தபோதுஇ அந்த மகத்தான மனிதனை நாடு மறந்துவிட்டதைப் பார்த்து நெஞ்சு பொறுக்காமல் நிலைகுலைந்தது பாரதியின் இதயம்.

‘பிள்ளைவாள்
அந்தக் கப்பல்களை
வெள்ளைக்காரனுக்கே
விற்றுவிட்டார்களாமே…
அதைவிட
சுக்கல்சுக்கலாய் உடைத்து
கடலில் கரைத்திருக்கலாமே…’
என்று கொதிக்கிறான் பாரதி தன்னைப் பார்க்க புதுச்சேரிக்கு வந்த வ.உ.சி.யிடம்!

‘மாமா உங்களுக்குத் தெரியாதா
மானங்கெட்ட நாடு இது’ என்கிறார் வ.உ.சி.

‘நாட்டை இகழாதீர்கள்…..
மானம் கெட்ட மக்கள் பிள்ளைவாள்…’
என்று அந்த நிலையிலும் திருத்துகிறான் பாரதி தேசத்தை விட்டுக் கொடுக்காமல்!

அதற்குப் பிறகாவது நாம் திருந்திவிட்டோமா? மனம் நொந்துபோய் பாரதிக்கே அதைத் திருப்பிச் சொல்ல வேண்டியிருக்கிறது…..
‘நாங்கள் மானங்கெட்ட மக்கள் பாரதி!’

‘இழிந்த சாதியில் பிறந்த ஒருவன்
எல்லா வேதமும் ஞானமும் பெற்றாலும்
சிருங்கேரி மடத்தின் தலைவராக முடியுமா’
என்று பாரதி கேட்டது எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு! அத்தனை ஆண்டுகளுக்கு முன் பாரதிக்கு இருந்த துணிச்சல் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் நமக்கு ஒட்டவே ஒட்டவில்லையே – ஏன்?

குற்றஞ் சுமத்த வேண்டும் என்கிற நோக்கத்துடனேயே இதைச் சொல்லவில்லை. பாரதியை மட்டுமல்ல… பாரதிகளின் தொடர்ச்சிகளையும் நிராகரிக்கிறோமே ஏன்?

மனசாட்சியோடு யோசித்துப் பாருங்கள்… எமக்குத் தொழில் எழுத்து – என்று ஞானச் செருக்கோடு பேசுகிற ஒருவனுக்கு இந்தச் சமூகம் என்ன இடம் தருமென்று நினைக்கிறீர்கள்? தமிழகத்தின் தலைநகர் சென்னைப் பெருநகரில் ‘எமக்குத் தொழில் எழுத்து’ என்று வெளிப்படையாகத் தெரிவித்து தமிழ் எழுத்தாளன் எவனையாவது வாடகைக்கு ஒரு வீடு பிடிக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம்…..

மீண்டும் மீண்டும் பாரதிகள் பிறக்கிறார்கள் நாம் தான் மீண்டும் மீண்டும் அவர்களை நடுத்தெருவில் நிறுத்தி யானையாய் மிதிக்கிறோம். செத்துப் போனபிறகு சூடம் காண்பித்து ‘பாரதியாரைத் தெரியுமா பாரதி யார் தெரியுமா’ என்றெல்லாம் வார்த்தை விளையாட்டில் இறங்குகிறோம். பாரதி யார் – என்று பேசுகிற தகுதி நம்மைக் காட்டிலும் சிற்பிக்கு இருக்கிறது. அதைத் தெரிவிக்கவே இதைத் தெரிவிக்கிறேன்!