140 கிலோமீட்டர் காற்றுடன் சென்னையை நெருங்கும் வார்தா புயல்

254 0

201612121016039894_varda-turns-as-super-cyclone_secvpf140 கிலோமீட்டர் தூரத்தில் ஆந்திராவை நோக்கி நகர்ந்துவரும் ‘வார்தா புயல்’ மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் இன்று பிற்பகலில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னைக்கு கிழக்கே சுமார் 140 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ள வார்தா புயல் மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் ஆந்திர மாநிலத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று பிற்பகல் சென்னையை நெருங்கும்போது மணிக்கு சுமார் 120 முதல் 140 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னையை கடந்து ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒங்கோலை நோக்கி செல்லும் புயலின் எதிரொலியாக கடல் சீற்றத்துடனும், கடல் அலைகள் 1 மீட்டர் உயரத்திற்கு எழக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் கடலோர மாவட்டங்களில் புயல் கரையை கடக்கும் போது கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வார்தா புயல் இன்று கரையை கடக்க உள்ள நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.

திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் 20 செ.மீ. அளவிற்கு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. வார்தா புயல் கரையை கடந்த பின்பும் அடுத்த 36 மணிநேரத்துக்கு மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை விமான நிலையம் பகுதியில் பலத்த காற்றுடன், தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சென்னைக்கு வந்து செல்லும் விமானங்கள் அனைத்தும் தாமதமாகவே புறப்பட்டுச் செல்கின்றன.

பிற்பகலில் இயக்கப்படும் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. காற்றின் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக சென்னையில் தரையிறங்க வேண்டிய அனைத்து விமானங்களும் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்படுகின்றன.