வடகொரியாவில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்ய சீனா நிரந்தர தடை

267 0

201612111612388855_china-puts-temporary-ban-on-north-korean-coal-imports_secvpfஐ.நா.சபையால் புதிய பொருளாதார தடை விதிக்கப்பட்ட வடகொரியா நாட்டில் இருந்து இனி நிரந்தரமாக நிலக்கரி இறக்குமதி செய்ய மாட்டோம் என சீன அரசு அறிவித்துள்ளது.

ஏவுகணை சோதனைகளின் மூலம் உலக நாடுகளை மிரட்டிவரும் வடகொரியா மீது 15 உறுப்பு நாடுகளின் ஒப்புதலுடன் ஐ.நா. பாதுகாப்பு சபையில் கடந்த வாரம் புதிய பொருளாதார தடை விதிக்கப்பட்டது.

வடகொரியாவிடம் இருந்து நிலக்கரியை இறக்குமதி செய்யக்கூடாது என பிறநாடுகளுக்கு தடை பிறப்பிப்பது உள்பட அந்நாட்டுக்கு பொருளாதார நெருக்கடியை கொடுக்கக்கூடிய பல்வேறு முக்கிய அம்சங்கள் இந்த தீர்மானத்தில் இடம்பெற்றுள்ளன.

வடகொரியாவின் ஒரே கனிமவளம் நிலக்கரிதான் என்பதும், நிலக்கரியை ஏற்றுமதி செய்வதன் மூலமாக மட்டும் ஆண்டுதோறும் சுமார் 400 கோடி டாலர்கள் அந்நாட்டின் கருவூலத்தை நிரப்பி வருவதும், இந்த தொகையில் பெரும்பகுதியை ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களை மேம்படுத்தும் திட்டத்துக்காக வடகொரியா அதிபர் செலவிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

‘எரிவதை பிடுங்கினால், கொதிப்பது அடங்கும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப வடகொரியாவின் பொருளாதாரத்துக்கு பக்கபலமாக இருக்கும் நிலக்கரி ஏற்றுமதி மற்றும் உலக நாடுகளில் இருந்து பெறப்படும் பல்வேறு அத்தியாவசியப் பொருட்களுக்கான இறக்குமதிக்கும் தடை செய்யும் ஐ.நா.சபையின் தீர்மானம் அந்நாட்டின் அதிபருக்கு சம்மட்டி அடியாக அமையும் என சர்வதேச அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில், வடகொரியா நாட்டிடம் இருந்து இனி நிலக்கரி இறக்குமதி செய்ய மாட்டோம் என நிரந்தரமாக தீர்மானித்துள்ளதாக சீன அரசு இன்று அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, சீன வர்த்தகத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ’ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையால் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட 2321-வது தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் வடகொரியா நாட்டில் உற்பத்தியாகும் நிலக்கரியை இனி நிரந்தரமாக இறக்குமதி செய்யப் போவதில்லை என அரசு முடிவெடுத்துள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகொரியாவின் அண்டைநாடுகளில் ஒன்றான சீனா ஆண்டுதோறும் சுமார் 70 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான நிலக்கரியை இறக்குமதி செய்துவந்தது குறிப்பிடத்தக்கது.