அச்சகத்தில் இருந்து பணம் கொண்டு சென்ற கன்டெய்னர் லாரி கவிழ்ந்தது

283 0

201612121013546008_container-carrying-cash-from-mint-overturns-in-bankura_secvpfமேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள அரசு அச்சகத்தில் இருந்து ரிசர்வ் வங்கிக்கு புதிய ரூபாய் நோட்டுகளை ஏற்றிச் சென்ற கன்டெய்னர் லாரி கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நாடு முழுவதும் உள்ள வங்கி கிளைகள் மற்றும் ஏ.டி.எம்.களில் நிலவிவரும் தட்டுப்பாட்டை போக்க மத்திய ரிசர்வ் வங்கி போர்க்கால அடிப்படையில் பணியாற்றி வருகிறது. நாசிக் உள்பட புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பாதுகாக்கப்பட்ட அரசு அச்சகங்களில் 24 மணிநேரமும் பணம் தயாரிக்கப்படுகிறது.

இந்த அச்சகங்களில் இருந்து கன்டெய்னர் லாரிகள் மூலம் புதிய ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அங்கிருந்து அன்றாடம் இதர வங்கிகளுக்கு பணம் அனுப்பி வைக்கப்படுகிறது. இதன் மூலம் கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையால் கைச்செலவுக்கு கூட பணம் எடுக்க முடியாமல் முடக்கி வைத்திருக்கும் மத்திய அரசு மீது மக்களுக்கு இருக்கும் கோபத்தை தணிக்க மத்திய ரிசர்வ் வங்கி முயற்சித்து வருகிறது.

அவ்வகையில், மேற்கு வங்காளம் மாநிலம், மேற்கு மிட்னப்பூர் மாவட்டம், சல்போனி என்ற பகுதியில் உள்ள அரசு அச்சகத்தில் இருந்து 50, 100, 2000 ரூபாய் முகமதிப்பிலான புதிய ரூபாய் நோட்டு கட்டுகள் ஏற்றப்பட்ட ஒரு கன்டெய்னர் லாரி, பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.

மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள பன்குரா மாவட்டத்தின் வழியாக பாட்னாவை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது, இங்குள்ள கோபிந்தாதம் – சாயன்பூர் அருகே ஒரு குறுகிய வளைவில் திரும்பியபோது, அந்த கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விழுந்தது.

புதிய நோட்டுகளாக பலகோடி ரூபாயை ஏற்றிவந்த லாரி கவிழ்ந்து கிடக்கும் தகவலை அறிந்த உள்ளூர்வாசிகள் அங்கு வேடிக்கை பார்க்க திரண்டு வந்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த ரிசர்வ் வங்கி உயரதிகாரிகள் கவிழ்ந்த லாரியில் இருந்த பணப்பெட்டிகளை வேறொரு லாரியில் ஏற்றி, பாட்னாவுக்கு அனுப்பி வைத்தனர்.