மரணத்தைச் சுமந்துபோன யானையின் ஓலம் அலைக்கழிக்கிறது: கமல் வேதனை

283 0

மரணத்தைச் சுமந்துபோன யானையின் ஓலம் அலைக்கழிக்கிறது. காலம் தலைகுனிகிறது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் வேதனை தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள மசினகுடி பகுதியில் பல ஆண்டுகளாகச் சுற்றித் திரிந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை கடந்த 19-ம் தேதி தீக்காயத்துடன் காது கிழிந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தது. அது வனத்துறையினரையும் அப்பகுதி மக்களையும் அதிர்ச்சியடையச் செய்தது.

இதனையடுத்து யானைக்குத் தீக்காயம் ஏற்படுத்திய நபர்களைப் பிடிக்க, முதுமலை புலிகள் காப்பகம் சிங்காரா வனத்துறையினர் தனிப்படை அமைத்தனர். விசாரணையில் மாவனல்லா குரூப் ஹவுஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகே இரவு நேரத்தில் அந்த யானை சென்றதும் அப்போது சிலர் அந்த யானையின் மீது எரியும் துணியை வீசியது தெரியவந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

விசாரணையில் மாவனல்லா குரூப் ஹவுஸ் பகுதியைச் சார்ந்த மல்லன் என்பவரது இரண்டு மகன்களும், அதே பகுதியைச் சார்ந்த பிரசாந்த் (36) என்பதும் தெரியவந்தது. அதில் மல்லன் என்பவரது மூத்த மகன் ரிக்கி ராயன் (31) தப்பி ஓடிய நிலையில் ரேமண்ட் டீன் (28) மற்றும் பிரசாந்த் (36) ஆகிய இருவரைச் சிங்காரா வனத்துறையினர் கைது செய்து, அவர்களை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் கேள்வி எழுப்பியுள்ளார். ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள அவர், ”காடுகள் கொன்று நாடுகள் ஆக்கினோம். காட்டுயிர்களின் கதியை மறந்தோம். உயிரோடு எரிக்கும் வழக்கம் எப்படி வந்தது? பின்வாங்கிப் போகும் யானையைக் கொளுத்துவது நாட்டுமிராண்டித்தனமா? மரணத்தைச் சுமந்துபோன யானையின் ஓலம் அலைக்கழிக்கிறது. காலம் தலைகுனிகிறது” என்று கமல்ஹாசன் வேதனை தெரிவித்துள்ளார்.