நீட் தேர்வில் வென்றவர்களுக்குத்தான் உள் ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது

275 0

நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்குத்தான் உள் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. நீட் தேர்வில் வெற்றி பெற்றிருந்தாலும் அரசு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என மத்திய அரசு கூறுவது சமூக நீதிக்கு எதிரானது என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கப் பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் விடுத்துள்ள அறிக்கை:

“நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையை நீட் நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான் நடத்த வேண்டும் என மத்திய அரசு முடிவு எடுத்து செயல்படுத்தி வருகிறது. நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறாமல் யாரும் மருத்துவப் படிப்புகளில் சேர முடியாது.

நீட் நுழைவுத் தேர்வு திணிக்கப்பட்ட பிறகு, அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேருவது மிகப்பெரிய அளவில் குறைந்துவிட்டது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் 80 விழுக்காட்டினருக்கும் மேல் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள்தான். இவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியாத நிலையை உருவாக்குவது சமூக நீதிக்கு எதிரானது.

எனவேதான் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீட்டை மருத்துவக் கல்லூரிகளில் வழங்கிட வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் பல்வேறு போராட்டங்களை நடத்தியது.

அதைத் தொடர்ந்து, தமிழக அரசு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தச் சட்டம் கொண்டுவந்தது. இந்த ஆண்டு நடை முறைப்படுத்தியது. இதனால் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த புதுச்சேரி மாநில அமைச்சரவை முடிவு செய்தது. அரசாணை மூலம் நடைமுறைப்படுத்த முயன்றது. இதற்குத் துணைநிலை ஆளுநர் அனுமதி வழங்கவில்லை. அந்தக் கோப்புகளை மத்திய உள்துறைக்கு அனுப்பிவைத்தார்.

அதனால், இந்த இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தவில்லை. இந்நிலையில் இந்த இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என அரசுப் பள்ளி மாணவி சுப்புலெட்சுமியின் தாயார் மகாலட்சுமி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ”இந்த ஒதுக்கீடு கல்வியின் தரத்தைப் பாதிக்கும். ஒரே நாடு ஒரே தரம் என்பதை பாதிக்கும். நீட் மூலமான தர அடிப்படையிலான மாணவர் சேர்க்கையைப் பாதிக்கும்” என்றெல்லாம் பதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வாதங்கள் எல்லாம் தவறானவை. பொருளற்றவை. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடும், நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்குத்தான் வழங்கப்படும். தமிழகத்திலும் நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

அதிலும் கூட, நீட்டில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள், அவர்களின் மதிப்பெண் மற்றும் தர அடிப்படையில்தான் இந்த இட ஒதுக்கீட்டில் சேர முடியும். நீட்டில் தேர்ச்சியடையாதவர்கள் இந்த ஒதுக்கீட்டில் சேர முடியாது.

• எனவே, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களே மருத்துவக் கல்வியில் சேர முடியும் என்னும் மத்திய அரசின் விதிமுறை மீறப்படவில்லை.

• நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே தரம் காக்கப்படும் என்ற மத்திய அரசின் கூற்றுப்படி, அரசுப் பள்ளி மாணவர்களும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்பே சேர்க்கப்படுவதால் இதில் எந்தவிதமான தகுதிக் குறைப்பாடோ, தரக் குறைபாடோ ஏற்படவில்லை. எனவே, தரம் போய்விடும் என்ற மத்திய அரசின் கருத்து தவறானது.

உண்மைக்கு மாறானது. உள்நோக்கம் கொண்டது. இட இதுக்கீட்டைத் தீர்மானிக்கும் மாநில அரசின் உரிமைகளுக்கு எதிரானது. ‘மத்திய பாஜக அரசு இட ஒதுக்கீட்டுக்கும், சமூக நீதிக்கும், ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த ஏழைகளுக்கும் எதிரான கொள்கையை உடையது’ என்பது இந்த வாதத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

• ‘நீட் தேர்வில் குறிப்பிட்ட ‘கட் ஆஃப்’ மதிப்பெண் பெற்றால் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும். அந்தக் குறிப்பிட்ட ‘கட் ஆஃப்’ மதிப்பெண்ணுக்குக் கீழே மதிப்பெண் பெறுபவர்கள் தேர்ச்சி பெறாததாக அறிவிக்கப்படும். அவ்வாறு தேர்ச்சி பெறாத மாணவர்கள் மருத்துவம் பயின்றால் தரம் குறைந்துவிடும் என்பது அரசின் வாதம். அதை மத்திய அரசே கடைப்பிடிக்கவில்லை. அதைக் கடைப்பிடிக்க மத்திய அரசு என்ன செய்ய வேண்டும்?

அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் உள்ள மருத்துவ இடங்களை நிரப்ப, நீட்டில் குறிப்பிட்ட ‘கட் ஆஃப்’ மதிப்பெண்ணுக்கு மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லையெனில், அந்த மருத்துவ இடங்களைக் காலியாகவிட்டால்தானே ’தரம்’ காப்பாற்றப்படும். ஆனால் அதற்கு மாறாக, தனியார் மருத்துவக் கல்லூரிகளின் இடங்கள் காலியாப் போகின்றன என்பதற்காக, கட் ஆஃப் மதிப்பெண்ணைக் குறைப்பது ஏன்?

இது முரண்பாடாக உள்ளதே! மருத்துவ இடங்கள் காலியாகப்போவது கூடாது என்பதும், ஒரு போட்டித்தேர்வில் கட் ஆஃப் மதிப்பெண் அவசியமற்றது என்பதும், தகுதி அடிப்படையில் மட்டுமே இட ஒதுக்கீட்டையும் நடைமுறைப்படுத்தி மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்பதும்தான் சரியானது என்பது வேறு விஷயம்.

• தரம் பற்றிப் பேசும் மத்திய அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், தனியார் நிகர் நிலை மருத்துவப் பல்கலைக் கழகங்களில் மருத்துவக் கல்வி இடங்கள் காலியாக இருந்தால், அந்நிறுவனங்களுக்கு உதவும் வகையில் கருணை உள்ளத்தோடு ‘கட் ஆஃப்’ மதிப்பெண்ணை குறைத்துவிடுகிறது. கடைசி நேரத்தில் நேரடியாக மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளலாம் என அனுமதிக்கிறது.

குறைந்த மதிப்பெண் பெற்ற பணம் உள்ள மாணவர்கள், அப்போது நேரடியாக மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து விடுகின்றனர். அப்போது மட்டும் தரம் பாதிக்கப்படாதா? ‘கட் ஆஃப்’ மதிப்பெண்ணைக் குறைப்பது நீட் தேர்வின் நோக்கம், தரம், தகுதி பற்றிய மத்திய அரசு கூறும் வாதங்களைச் சிதைக்காதா?

• தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளையை, லாபத்தை உறுதிப்படுத்த, கட் ஆஃப்’ மதிப்பெண்ணை, கருணையோடு குறைப்பதுதான் தகுதியை, தரத்தைப் பாதுகாக்கும் லட்சணமா? முறைகேடான மாணவர் சேர்க்கையைத் தடுக்கும் வழிமுறையா? இதற்கு மத்திய அரசு விளக்கம் அளிக்குமா?

• நீட் ‘கட் ஆஃப்’ மதிப்பெண்ணை மத்திய அரசு குறைப்பதனால், குறைந்த மதிப்பெண் பெற்ற, வசதி படைத்தவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துவிடுகின்றனர். நல்ல மதிப்பெண் இருந்தும் பணம் இல்லாத ஏழை மாணவர்கள் அக்கல்லூரிகளில் சேர முடியவில்லை. பணமே மாணவர் சேர்க்கைக்கான தகுதியாக மாறிவிடுகிறதே! இதைத் தடுக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? ஏழை மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர பொருளாதார ரீதியாக என்ன உதவி செய்தது?

• நீட்டில் குறைவான மதிப்பெண் பெற்ற வசதி படைத்தோர், மருத்துவக் கல்லூரிகளில் சேர கட் ஆஃப் மதிப்பெண்ணைக் குறைத்துவிடுகிறது. அதே சமயம், நீட்டில் தேர்ச்சி பெற்ற ஏழை மாணவர்களை, அவர்கள் அரசுப் பள்ளியில் படித்தவர்கள் என்பதாலேயே தரம் குறைந்தவர்கள் என முத்திரை குத்துகிறது. இது என்ன நியாயம்?

• முன்னேறிய வகுப்பில் உள்ள ஏழைகளுக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் எஸ்.சி / எஸ்.டி மாணவர்களைவிட மிகக் குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் கூட மருத்துவக் கல்லூரிகளில் சேர்கின்றனர். இது தரத்தைப் பாதிக்காதா? முன்னேறிய வகுப்பில் உள்ள ஏழைகளுக்கு ஒரு நீதி, அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஒடுக்கப்பட்ட சமூகங்களில் உள்ள ஏழைகளுக்கு மற்றொரு நீதியா?

• நீட்டில் நல்ல மதிப்பெண் பெற்றும், கல்விக் கட்டண அதிகரிப்பால் ஏழை மாணவர்கள் பல்வேறு மாநிலங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூட சேர முடியவில்லை. அவர்களுக்கு கிடைக்க வேண்டிய இடங்களில் வசதி படைத்தோர் சேர்ந்து விடுகின்றனர். தமிழக அரசு நடத்தும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக்கல்லூரி, பெருந்துறை மருத்துவக் கல்லூரி போன்றவை இதற்கு உதாரணம். ‘ஒரே தேசம் ஒரே தரம்’ என்பதை நடை முறைப்படுத்தும் லட்சணம் இதுதானா?

• நாடு முழுவதும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 50 விழுக்காடு இடங்களுக்கு மட்டுமே கட்டணத்தை முறைப்படுத்துவோம் என, தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் 2019-ல் மத்திய அரசு கூறியுள்ளது. 50 விழுக்காடு இடங்களை விலை பேசி விற்க அனுமதிப்பது, தர அடிப்படையிலான மாணவர் சேர்க்கையைப் பாதிக்காதா?

• தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்புக்கான ஆண்டு கல்விக் கட்டணம் 13,600. அதே தமிழக அரசின் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.5.44 லட்சம். பாஜக ஆளும் ஹரியாணா மாநிலத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் ஆண்டு கல்விக் கட்டணம் ரூ 10 லட்சம். ரூபாய் 10 லட்சம் கட்டணம் செலுத்தி ஏழை மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எவ்வாறு சேர இயலும்? ஏன் இந்தக் கட்டண ஏற்றத்தாழ்வு?

நாடு முழுவதும் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் எம்பிபிஎஸ் கல்விக் கட்டணம் ரூ.13,600 என நிர்ணயிக்க மத்திய அரசு தயாரா? ‘ஒரே தேசம் ஒரே தரம்’ என முழங்கும் மத்திய அரசு ‘ஒரே தேசம் ஒரே கட்டணம்’ என்பதை நடைமுறைபடுத்த முன்வருமா?

• லாப நோக்கிலும் தனியார் பெரு நிறுவனங்கள் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த மருத்துவக் கல்லூரிகளில் நல்ல மதிப்பெண் வாங்கிய ஏழை மாணவர்கள் படிக்க இயலுமா?

• பணக்காரக் குடும்ப மாணவர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் மத்திய அரசு, தரத்தைப் பற்றிப் பேசுவது வேடிக்கையாக உள்ளது.

• ஒரு நுழைவுத் தேர்வு மட்டுமே மருத்துவரின் தரத்தை முடிவு செய்துவிட முடியாது. மருத்துவக் கல்லூரிகளில் வழங்கப்படும் கல்வியின் தரம், தொடர் பயிற்சிகள், அனுபவம், அதைப் பெறுவதற்கான வாய்ப்புகள் போன்றவையே ஒரு மருத்துவரின் திறமையை வளர்த்துக் கொள்ள உதவும். நீட் தேர்வு வருவதற்கு முன்பு மருத்துவப் படிப்பைப் படித்த மருத்துவர்கள் எல்லாம் திறமையானவர்களாகவே உள்ளனர்.

மத்திய அரசு, மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிப்பதற்காகவும், சமூக நீதியை ஒழித்துக் கட்டுவதற்காகவும் , ஏழை மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்வதைத் தடுப்பதற்காகவும், ’ஒரே தேசம், ஒரே தேர்வு, ஒரே தரம்’ என்ற நாடகத்தை நடத்தி வருகிறது.

• தகுதி அடிப்படையில், முறைகேடுகள் இன்றி மாணவர் சேர்க்கையை நடத்திடவும், கட்டாய நன்கொடை வசூலைத் தடுத்திடவும், நீட் தேர்வைக் கொண்டுவருவதாக மத்திய அரசு கூறியது. மாநில உரிமைகளும், இட ஒதுக்கீடும் பாதிக்கப்படாது என்றும் உறுதி அளித்தது. ஆனால், இப்பொழுது மாநில உரிமைகளிலும், இட ஒதுக்கீட்டிலும் மத்திய அரசு தலையீடு செய்கிறது. இது கண்டனத்திற்குரியது.

• நீட் தேர்வில் வெற்றி பெற்றிருந்தாலும் அரசு மாணவர்களுக்கும், இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என மத்திய அரசு கூறுவது சமூக நீதிக்கு எதிரானது.

• மத்திய அரசின் நிர்பந்தங்களுக்கு தமிழக அரசு அடி பணியக் கூடாது. மருத்துவக் கல்வியில் மாநில உரிமையை நிலைநாட்ட வேண்டும். புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை மருத்துவப் படிப்பில் நடைமுறைப்படுத்த உடனடியாக அனுமதி வழங்கிட வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம், மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது.

*தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ள 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டைப் பாதுகாத்திட, எச்சரிக்கை உணர்வுடன் இருந்து செயல்பட வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம், தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது”.

இவ்வாறு டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் வலியுறுத்தியுள்ளார்.