டிரம்ப் வெற்றி பெற ரஷியா உதவி – சி.ஐ.ஏ. குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த ஒபாமா உத்தரவு

241 0

201612110003374698_obama-orders-review-into-russian-hacking-before-us-election_secvpfஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற ரஷ்யா உதவியது என அந்த நாட்டின் மத்திய உளவு முகமை சி.ஐ.ஏ. குற்றம் சாட்டி உள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்காவில் கடந்த மாதம் 8ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றது.

கடும்போட்டி நிலவிய இந்த தேர்தலில் பாப்புலர் ஓட்டு என்று அழைக்கப்படுகிற மக்கள் ஓட்டு, ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கு அதிகமாக கிடைத்தது.

அவர் 6 கோடியே 57 லட்சத்து 46 ஆயிரத்து 544 ஓட்டுகள் பெற்றார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் 6 கோடியே 29 லட்சத்து 4 ஆயிரத்து 682 ஓட்டுகள் பெற்றார்.

ஆனால் எலெக்டோரல் ஓட்டு என்னும் தேர்தல் சபை ஓட்டுகள், டிரம்புக்கு அதிகமாக கிடைத்ததால் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அவர் 306 தேர்தல் சபை ஓட்டுகளையும், ஹிலாரி 232 தேர்தல் சபை ஓட்டுகளையும் பெற்றனர்.

அடுத்த மாதம் 20ஆம் திகதி டிரம்ப், அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ளார்.

அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தனது ஆதரவாளரான டிரம்ப் வெற்றி பெறுவதற்கு ரஷ்யா உதவி இருக்கிறது என்று மத்திய உளவு முகமை சி.ஐ.ஏ., குற்றம் சாட்டி உள்ளது.

அமெரிக்காவின் பிரபல வாஷிங்டன் போஸ்ட்டும், நியூயார்க் டைம்ஸ்சும் இது குறித்த தகவல்களை வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

இப்படி அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது, இணையதளங்களில் சட்டவிரோதமாக ஊடுருவி நடத்தப்பட்ட திருட்டுகள் பற்றி விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி ஒபாமா உத்தரவிட்டார்.

இது குறித்து உளவு அமைப்புகள் விசாரணை நடத்தி, ஜனவரி 20ஆம் திகதிக்குள் அறிக்கை அளிக்குமாறு அவர் பணித்துள்ளார்.