ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் – தமிழக அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம்

287 0

201607021841284764_chief-minister-jayalalithaa-participated-in-iftar_secvpfதமிழ்நாடு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அரசு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா எதிர்பாராதவிதமாக இயற்கை எய்தியது குறித்து, தமிழக அமைச்சரவை அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரமும் கொள்கிறது.

அன்னாரது மறைவால் அவரைப் பிரிந்து வாடும் இலட்சோபலட்சம் இரத்தத்தின் இரத்தமான கழக உடன்பிறப்புகளுக்கும், தமிழக மக்களுக்கும், உலகமெங்கும் வாழும் தமிழர்களுக்கும் தமிழ்நாடு அமைச்சரவை தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

நம் அனைவரின் நெஞ்சில் நிறைந்திருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்தை தமிழக சட்டமன்றப் பேரவையில் வைப்பதற்கும், அவருக்கு பாரத ரத்னா விருது அளிப்பதற்கு மைய அரசுக்கு பரிந்துரைப்பதற்கும், அவருக்கு நாடாளுமன்ற வளாகத்தில் முழு திருவுருவ வெண்கல சிலை அமைப்பதற்கு மைய அரசிடம் கோருவதற்கும்,

அவர் நல்லடக்கம் செய்யப்பட்ட அதே இடத்தில் ரூபாய் பதினைந்து கோடியில் நினைவு மண்டபம் அமைப்பதற்கும், பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். நினைவிடம் என்பதை ‘பாரத ரத்னா டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித்தலைவி அம்மா செல்வி ஜெ ஜெயலலிதா நினைவிடம்’ என பெயர் மாற்றம் செய்யவும் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.