காவிரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்கக் கோரிய வழக்கு 8 வாரங்களுக்கு ஒத்திவைப்பு

596 0

201612100455084282_sevaage-water-diffuse-cauvery-suspended-for-8-weeks-to_secvpfகாவிரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்கக்கோரி தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் 8 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

கர்நாடக மாநிலத்தில் காவிரி கரையில் உள்ள சில நகரங்கள் மற்றும் தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் காவிரி ஆற்றில் அதிக அளவில் கலக்கின்றன. குறிப்பாக பெங்களூரு மாநகரின் 80 சதவீத கழிவுநீரும் காவிரியில் தான் கலக்கிறது. ஆண்டுக்கு சுமார் 5 லட்சத்து 40 ஆயிரத்து 200 மில்லியன் லிட்டர் கழிவுநீர் கர்நாடகாவிலிருந்து காவிரி மூலம் தமிழகத்துக்கு வருகிறது.

கழிவுநீரோடு வரும் காவிரி நீரில் விளையும் பயிர்களில் வேதிப்பொருட்களின் தன்மை அதிகம் இருப்பதாக ஆய்வில் தெரியவருகிறது. இதனால் காவிரி கரையோரம் வாழ்பவர்கள் பலவிதமான நோய்களுக்கு ஆட்படுகிறார்கள். மாசுபட்ட ஆற்றுநீரை பயன்படுத்தும் உயரினங்களும் பாதிக்கப்படுகிறது. எனவே, கர்நாடக மாநிலத்தில் கழிவுநீரை நேரடியாக ஆற்றில் கலக்காமல் சுத்திகரித்த பின்னர் ஆற்றில் விடும் வகையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டது.

இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஜே.எஸ்.கெஹர், என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் வக்கீல்கள் ஜி.உமாபதி, சி.பரமசிவம் ஆகியோரும், கர்நாடக அரசு தரப்பில் மூத்த வக்கீல் பாலி நாரிமன், கர்நாடக அரசு வக்கீல் மோகன் கத்தர்க்கி ஆகியோரும் ஆஜரானார்கள்.

விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள், இது சுற்றுச்சூழல் தொடர்பான விவகாரம். தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இதுபோன்ற வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதாக தெரிகிறது என்று கூறினர்.

இதற்கு தமிழக அரசு வக்கீல் ஜி.உமாபதி, இது பிரதானமாக இரு மாநிலங்களுக்கு இடையிலான விவகாரம். ஏற்கனவே இது தொடர்பாக பதில் மனு, எதிர்பதில் மனுவும் மற்ற ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தண்ணீர் சுத்திகரிப்பு விஷயத்தில் அடிப்படையான அம்சங்களை கர்நாடக அரசு கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. அதனால் இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

கர்நாடக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பாலி நாரிமன், தங்கள் தரப்பில் மேலும் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.இதனைத் தொடர்ந்து வழக்கின் மீதான விசாரணையை 8 வாரங்களுக்கு ஒத்திவைப்பதாகவும், கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்குவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.