தொழில் அதிபர் சேகர் ரெட்டி வீட்டில் மேலும் ரூ.32 கோடி ரொக்க பணம், 30 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பல முக்கிய ஆவணங்களும் சிக்கியதாக கூறப்படுகிறது.
கறுப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக புழக்கத்தில் இருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு பின்னர் செல்லாத 500, 1,000 ரூபாய் நோட்டுகளை தங்கமாகவும், புதிய ரூபாய் நோட்டுகளாகவும் தொழில் அதிபர்கள் மாற்றி வருவதாக வருமான வரித்துறைக்கு ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் சென்னையை சேர்ந்த தொழில் அதிபரான சேகர் ரெட்டி, அவருடைய உறவினர் சீனிவாச ரெட்டி மற்றும் நண்பர் பிரேம் ஆகியோருடைய வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.
இதில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் தங்கம் குறித்து, வருமான வரித்துறையின் உயரிய அமைப்பான மத்திய நேரடி வரிகள் வாரியம் நேற்று அறிக்கை வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தொழில் அதிபர் சேகர் ரெட்டி, தமிழ்நாடு முழுவதும் மணல் குவாரி நடத்துவதற்கான உரிமம் பெற்றுள்ளார். அவர் தொடர்புடைய 6 குடியிருப்புகள் மற்றும் 2 அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இதில், ரூ.96 கோடியே 89 லட்சம் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகளும், ரூ.9 கோடியே 63 லட்சம் மதிப்புள்ள புதிய ரூ.2,000 நோட்டுகளும் கைப்பற்றப்பட்டன. ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு பிறகு இவ்வளவு பெரிய தொகை, அதுவும் புதிய நோட்டுகளாக கைப்பற்றப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.
அத்துடன், 127 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூ.36 கோடியே 29 லட்சம் ஆகும். இவை எல்லாம் கணக்கில் வராத சொத்துகள் ஆகும். கைப்பற்றப்பட்ட சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ.142 கோடியே 81 லட்சம் ஆகும். வெள்ளிக்கிழமையும் (நேற்று) சோதனை நடத்தப்பட்டது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் தங்கத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சென்னையில் பத்திரிகையாளர்கள் முன்பு காட்சிக்கு வைத்தனர்.இந்த நிலையில் சேகர் ரெட்டி, சீனிவாச ரெட்டி மற்றும் பிரேம் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்று 2-வது நாளாக வருமான வரி சோதனை தொடர்ந்து நடைபெற்றது.
சென்னை தியாகராயநகர் விஜயராகவா சாலை, சாம்பசிவம் சாலையில் உள்ள சேகர் ரெட்டிக்கு சொந்தமான வீடுகள், அபிபுல்லா சாலையில் உள்ள அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த சோதனையில் பல கோடி மதிப்பிலான முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோடிக்கணக்கில் பணம் சிக்கியதால் அதனை எண்ணுவதற்கு வங்கிகளில் பயன்படுத்தப்படும் எந்திரங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். சீனிவாச ரெட்டியின் வீட்டிலும் பணம் சிக்கியதாக கூறப்படுகிறது. மேலும் ஏராளமான முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இருப்பினும் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல வேலூரில் உள்ள சேகர் ரெட்டியின் பூர்வீக வீட்டிலும் வருமான வரித்துறையினரின் சோதனை நடந்தது. ஆகையால் கைப்பற்றப்படும் தொகையின் மதிப்பு இன்னும் பல கோடிகளைத் தாண்டும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறுகையில், “கூடுதலாக 3 இடங்களில், வெள்ளிக்கிழமை (நேற்று) சோதனை நடத்தப்பட்டது. இதில், மாலை வரையிலான நிலவரப்படி ரூ.32 கோடி ரொக்கமும், 30 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மூலம் இரு நாட்களிலும் சேர்த்து மொத்தம் ரூ.138 கோடியே 52 லட்சம் ரொக்கமும், 157 கிலோ தங்கமும் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர வெவ்வேறு வங்கிகளில் ரூ.500 கோடி அளவுக்கு முதலீடு செய்ததற்கான ஆவணம், கான்டிராக்ட் கொடுக்கப்பட்டது தொடர்பான ஆவணங்களும் சிக்கியுள்ளன. மொத்தம் 10 மூட்டை அளவுக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்கள் சிக்கியுள்ளன. அந்த ஆவணங்களை மீளாய்வு செய்து வருகிறோம். அதே சமயத்தில் சோதனை தொடர்ந்து நடைபெறுகிறது” என்றனர்.
இதற்கிடையே, கைப்பற்றப்பட்ட பணம், தங்கம் அனைத்தும் தன்னுடையதுதான் என்று சேகர் ரெட்டி ஒப்புக்கொண்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக அவர்கள் மேலும் கூறியதாவது:-
சேகர் ரெட்டி மற்றும் அவரை சார்ந்தவர்களின் நடவடிக்கைகளை கடந்த சில நாட்களாக உளவுத்துறையினர் கண்காணித்து வந்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில்தான் இந்த சோதனை நடத்தப்பட்டது. பண பரிமாற்றம் தொடர்பான ஆவணங்கள், தங்க விற்பனை தொடர்பான குறிப்புகள் மற்றும் விற்பனை, கொள்முதல் தொடர்பான ஆவணங்களும் சிக்கின. கைப்பற்றப்பட்ட புதிய ரூ.2,000 நோட்டு கட்டுகளில் வங்கி காகிதம் எதுவும் சுற்றப்பட்டு இருக்கவில்லை. அதிகாரிகளை குழப்பும் வகையில் அவை வைக்கப்பட்டு இருந்தன. அத்தனை பணம் மற்றும் நகையும் தனக்கு சொந்தமானதுதான் என்று சேகர் ரெட்டி தெரிவித்தார்.
சமீபகாலத்தில் வேறு எங்கும் இவ்வளவு பெரிய தொகை கைப்பற்றப்படவில்லை. இவ்வளவு அதிகமான புதிய ரூபாய் நோட்டுகள் அவருக்கு எப்படி கிடைத்தன என்று அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
வருமான வரித்துறை சோதனைக்கு உள்ளான சேகர் ரெட்டி, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் அறங்காவலர் குழு உறுப்பினராக உள்ளார். பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறையில் பல்வேறு ஒப்பந்த பணிகளை (கான்டிராக்ட்) எடுத்துச் செய்வதில் முன்னணியில் இருந்து வருவதாகவும், அமைச்சர்கள் சிலருக்கு நெருக்கமானவர் என்றும் கூறப்படுகிறது.

