உள்நாட்டு சுற்றுலா மேம்பாட்டு திட்டம்- துணை அதிபர் வீடியோ வெளியிட்டார்

262 0

அமீரகத்தில் கடந்த வாரம் ‘உலகின் மிகச்சிறந்த குளிர்காலம்’ என்ற உள்நாட்டு சுற்றுலா மேம்பாட்டு திட்டமானது அறிமுகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அது குறித்த பிரசார வீடியோவை அமீரக துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

அமீரக பொருளாதார அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்த இந்த பிரசாரம் செயல்படுத்தப்பட்டுள்ளது. உலகின் மிகச்சிறந்த குளிர்காலம் என்ற தலைப்பில் 7 அமீரகங்களில் உள்ள சுற்றுலா தலங்களை ஒருங்கிணைத்து ஐக்கிய அரபு அமீரகம் என்ற ஒரே தளத்தின் கீழ் கொண்டு வந்து பிரபலப்படுத்தும் முயற்சியாக இந்த பிரசார திட்டம் அமைந்துள்ளது.

புதிய சுற்றுலா பிரசாரமானது தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஐக்கிய அரபு அமீரகத்தை ஒரே சுற்றுலா மையமாக ஒருங்கிணைத்து பல்வேறு முக்கிய பகுதிகளை பிரபலப்படுத்தி அதன் மூலம் அதிக அளவில் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பது நோக்க்கமாக உள்ளது. அமீரக அரசின் உள்நாட்டு சுற்றுலா உத்தியின் அடிப்படையில் அமீரக சுற்றுலா வளங்களை ஒருங்கிணைத்து பொருளாதாரத்தில் செயல்திறன் மிக்க துறையாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய சுற்றுலா பிரசாரத்திற்காக அமீரக அரசு சார்பில் 4 ஆயிரத்து 100 கோடி திர்ஹாம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் உள்நாட்டு சுற்றுலா மட்டுமல்லாமல் அதனை சார்ந்துள்ள சிறு வர்த்தகங்களுக்கு வாய்ப்பளித்து அவர்களது வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்த பிரசாரமானது செயல்படுத்தப்பட உள்ளது. இதில் அந்த திட்டத்தை மேலும் பிரபலப்படுத்தும் வகையில் அமீரக துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் அமீரகத்தில் உள்ள அழகிய கடற்கரைகள், கோட்டைகள், நீரோடைகள், பாலைவன பகுதிகள் மற்றும் சூரிய வெளிச்சத்தில் அந்த பகுதிகள் ஒளிரும் வகையில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவிற்கு எனது அழகிய நாடு என்ற தலைப்பு அளித்துள்ளார். மேலும் பல்வேறு சுற்றுலா அனுபவங்களை அனைவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று பதிவிடவும் அழைப்பு விடுத்துள்ளார்.