நூதன முறையில் வங்கி ஏ.ரி.எம் இயந்திரங்களில் பணம் திருடிய நபர் கைது

256 0

வவுனியாவிலுள்ள வங்கி ஏ.ரி.எம் இயந்திரங்களில் நூதன முறையில் பணங்களை களவாடிய நபரை வவுனியா சிறு குற்றத்தடுப்பு பொலிஸார் நேற்று (15) மாலை கைது செய்துள்ளனர்.

வவுனியா நகரில் அமைந்துள்ள அரச வங்கிகளான மக்கள் வங்கி, இலங்கை வங்கி ஆகியவற்றின் ஏ.ரி.எம் இயந்திரங்களில் பணம் மீளப்பெறுவதற்கு வருகை தரும் நபர்களுக்கு உதவி செய்கின்ற போல் சென்று அவர்களின் ஏ.ரி.எம் அட்டை , இரகசிய இலக்கம் என்பவற்றினை பெற்று பண மோசடி இடம்பெற்றுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலைய சிறு குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த ஐந்து நபர்களின் முறைப்பாட்டினையடுத்து சிறு குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் இரகசிய முறையில் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

சிசிரிவி மற்றும் பொதுமக்களின் உதவியுடன் இவ் மோசடியில் ஈடுபட்ட மதவாச்சி அடவீரகொல்லாவா பகுதியினை சேர்ந்த 35 வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் குறித்த நபர் கடந்த ஒரு வருடகாலமாக இவ் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமையுடன் பல லட்சம் பெறுமதியான பணமும் இவ் நூதன முறையில் பெறப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட நபரை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆயர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை வவுனியா சிறு குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.