நெற்பயிர்களில் தேங்கியிருந்த தண்ணீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம்

314 0

டெல்டா மாவட்டங்களில் வயல்களில் குளம்போல் தேங்கி கிடந்த தண்ணீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

புரெவி புயல் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரம் அருகே கரையை கடந்தது. இந்த புயலால் ராமேஸ்வரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தென்மாவட்டங்களை காட்டிலும் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் மிக மிக அதிக கனமழை பெய்தது. கடந்த 5 நாட்களாக இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்தது. பல ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி நெற்பயிர்கள் மூழ்கின. இதேப்போல் சோளம், பொங்கல் கரும்பு உள்ளிட்ட பிற பயிர்களும் பாதிக்கப்பட்டன. பல இடங்களில் குடியிருப்புகளை சுற்றி மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அவதிப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் அதிகாலை சிறிது நேரம் லேசான சாரல் மழை பெய்தது. அதன் பிறகு பகலில் மழை இல்லை. ஒரு சில இடங்களில் மட்டும் சாரல் பெய்தது. மற்றப்படி மழையின் தீவிரம் குறைந்து காணப்பட்டது. மழை இல்லாததால் விவசாயிகள் சற்று நிம்மதி அடைந்தனர்.

வயல்களில் குளம்போல் தேங்கி கிடந்த தண்ணீரை வடிய வைக்கும் பணியில் இரவு பகலாக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறைந்தது 1 வாரமாவது மழை இல்லாமல் வெயில் அடித்தால் தேங்கிய தண்ணீரை ஓரளவுக்காவது வெளியேற்ற முடியும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனர்.

டெல்டா மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களில் சுமார் 3 லட்சம் ஏக்கர் பரப்பில் சம்பா, தாளடி இளம் பயிர்களாக உள்ளன. தொடர் மழையால் இந்த இளம் பயிர்கள் மூழ்கியது. அதிகமாக நேரத்தில் மழைநீர் இளம் பயிர்கள் மூழ்கி இருந்ததால் இதன் நிலைமை என்ன ஆகும் என்ற கவலையில் விவசாயிகள் காணப்படுகின்றனர். மழைநீர் முழுமையாக வடிந்த பிறகு தான் இளம் பயிர்களின் நிலை தெரிய வரும் என்று கூறினர்.

மேலும் தொடர் மழையால் சம்பா பயிர்களில் வழக்கத்தை விட விளைச்சல் பாதிக்கும் அபாயம் உள்ளது. உடனடியாக வேளாண் துறையினர் விவசாயிகளுக்கு முழு மானியத்தில் யூரியா, சிங் சல்பேட் வழங்க வேண்டும். இந்த உரங்கள் தனியார் கடைகளில் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு முழுமையான நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர்கள் மட்டுமில்லாது பொங்கல் கரும்பு உள்ளிட்ட பிற பயிர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 35 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் கனமழையால் சாய்ந்து பாதிக்கப்பட்ட கரும்புகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கரும்பு விவசாயிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்ய அனுமதிக்குமாறு மத்திய அரசிடம் நுகர்பொருள் வாணிப கழகம் வலியுறுத்தியது. அதைதொடர்ந்து கடந்த மாதம் வந்த மத்திய அரசு அதிகாரிகள் நெல் ஈரப்பத மாதிரியை பரிசோதித்து அரசுக்கு அனுப்பினர். இதை ஆய்வு செய்த மத்திய அரசு நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 20 சதவீதமாக உயர்த்தி நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு அனுமதி வழங்கி உள்ளது. இதனால் அடுத்து வர உள்ள சம்பா, தாளடி அறுவடையின்போது 20 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இது விவசாயிகளுக்கு சற்று ஆறுதல் அளிக்ககூடியதாக இருந்தாலும் 22 சதவீதமாக ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

தொடர் புயலால் விவசாய பயிர்கள் மட்டுமில்லாது மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் புரட்டி போட்டுவிட்டது. நிவர், புரெவி என 2 புயல்கள் அடுத்தடுத்து வந்ததாலும் கடல் சீற்றமாக காணப்பட்டதாலும் நாகை மாவட்டத்தில் வேதாரண்யம் , நாகை, ஆறுகாட்டுத்துறை உள்ளிட்ட பல்வேறு மீனவ பகுதிகளில் மீனவர்கள் கடந்த 17 நாட்களாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் இருந்தனர்.

இந்நிலையில் புயல் ஓய்ந்து கடல் அலைகள் இயல்பு நிலைக்கு வந்ததால் மீன்துறை மீன் பிடிக்கச் செல்லலாம் என்று அறிவித்திருந்தது. இதையடுத்து இன்று நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து மீனவ கிராமங்களிலும் மீனவர்கள் 17 நாட்களுக்கு பிறகு தங்கள் படகுகளில் மீன்பிடிக்க சென்றனர். இதில் வேதாரண்யம் தாலுக்காவில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகில் சுமார் 5000 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

இதேப்போல் தஞ்சை மாவட்டத்தில் கொள்ளுக்காடு, மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் உள்பட 30-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் மீனவர்கள் கடந்த 1 வாரமாக அனுமதி டோக்கன் கிடைக்காததாலும், புயலாலும் மீன்பிடிக்க செல்லாமல் இருந்தனர். தற்போது அனுமதி டோக்கன் வழங்கப்பட்டதால் 1 வாரத்துக்கு பிறகு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர்.

ஒட்டுமொத்தத்தில் மழையின் தீவிரம் குறைந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மெல்ல மெல்ல திரும்பி வருகிறது.