மீஞ்சூர் அருகே 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாத்துகள் இறந்து கிடந்ததால் பரபரப்பு

318 0

மீஞ்சூர் அருகே 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாத்துகள் குளிர் காரணமாக இறந்ததா? மர்ம நோய் தாக்கி இறந்ததா? என்பது குறித்து கால்நடை துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

மீஞ்சூர் அருகே உள்ள நெய்தவாயல் கிராமம் கணபதி நகரில் வசிப்பவர் தனவேல். இவர் வாத்து வளர்க்கும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வந்த நிலையில், அவர் வாத்துகளை மேய்த்து விட்டு கொட்டகையில் அடைத்து வைத்தார். இந்நிலையில் கொட்டகையில் அடைத்து வைக்கப்பட்ட 3 ஆயிரத்து 200 வாத்துகள் நேற்று மர்மமான முறையில் திடீரென செத்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது தொடர்பாக பொன்னேரி கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் மீஞ்சூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து கால்நடை மருத்துவர் கனகமணி உள்ளிட்ட அதிகாரிகள் இறந்த வாத்துகளை பரிசோதனை செய்தனர். மேலும் வாத்துகள் குளிர் காரணமாக இறந்ததா? மர்ம நோய் தாக்கி இறந்ததா? என்பது குறித்து கால்நடை துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்பின்னர் ஒரு இடத்தில் குழி தோண்டி வாத்துகளை புதைத்தனர். ஒரே நேரத்தில் 3,200 வாத்துகள் இறந்த சம்பவம் நெய்தவாயல் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.