ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தை கலைக்க அமைச்சரவை அனுமதி

284 0

gayanthaரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தை கலைக்க, பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு, அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் கயந்த கருணாதிலக்க இதனை கூறியுள்ளார்.

கடந்த காலத்தில் நிலவிய பாதுகாப்பு சூழ்நிலையின் கீழ் பொருளாதார கேந்திர நிலையங்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பிற்காக ஈடுபட்டிருந்த ஆயுதமேந்திய இராணுவத்தினரை அகற்றி, நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதன் நிமித்தம் அத்தகைய இடங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக இந்த நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டிருந்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

எனினும், நாட்டில் தற்போது நிலவும் சமாதான சூழலில், அரசுடன் இணைந்து தனியார் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை எனவும் ஜனாதிபதியின் யோசனையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனம் தற்போது முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளை, சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்கும், கரையோர பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களை கடற்படையினருக்கும் ஒப்படைக்க சட்டமா அதிபர் பரிந்துரைத்துள்ளதாகவும் அமைச்சர் கயந்த கருணாதிலக்க மேலும் குறிப்பிட்டார்.