கார்த்திகை ,26 பிரபாகரன் காலம் தந்த கொடை………..

268 0

தமிழினத்தின் வரலாற்றுப் பரப்புக்கால எல்லை மிக நீண்டது. அதனைத் தோற்றக்காலம், கழகக் காலம், கழகம் மருவிய காலம், பிற்காலம், தற்காலம் என வகைப்படுத்தியுள்ளனர். இந்த வரலாற்றுக் கால எல்லையில் தமிழர்க்கு நேர்ந்திருக்கின்ற நிகழ்வுகள், ஈட்டங்கள் இழப்புக்கள் பற்பல.

தமிழர்களின் தோற்றம் வரலாற்றுக் காலத்திற்கும் முந்தியது என அறிஞர் குறிப்பிடுகின்றனர். சேரன், சோழன், பாண்டியன் என்னும் மூவேந்தர் குடியின் வரலாறுகள் கழகக் காலத்திற்கு உட்பட்டவையாகவே காட்டப்படுகின்றன. இந்தக் காலத்திலேயே தமிழினத்தின் ஏற்றங்களும் படிப்படியான தாழ்ச்சிகளும் நிகழ்ந்து விட்டன. கி.மு.10 ஆம் நூற்றாண்டு அளவில் ஆரியர் புகவு தமிழினத்தின் சிதைவுகளுக்கு மூலக்காரணியாக அமைந்துள்ளது. கழகக் காலத்திற்குப் பிறகு தமிழர்களின் அரிய கருவூலங்கள் படிப்படியாக அழிக்கப்பட்டன, மறைக்கப்பட்டன. பண்பாட்டுச் சிதைவு, மொழிச் சிதைவு ஏற்படுத்தப்பட்டுத் தனித்தன்மை பொருந்திய இறையாண்மையுந் தமிழரிடமிருந்து பறிபோகியது.

அனைத்தையும் தமிழன் வந்தேறிகளிடத்தும் இனமாறிகளிடத்தும் இழக்கலானான். தமிழ்க்கலை, தமிழிசை, தமிழ்ப்பண்பாடு, தமிழ் மருத்துவம், தமிழ்க் கணக்கியல், கட்டடக்கலை, வானியலறிவு, மண்ணியலறிவு, உளவியலறிவு, தற்காப்புக்கலை முதலானவற்றை இவற்றுள் அடக்கலாம். தொடக்கத்தில் இவற்றைக் காத்துவந்த மன்னாதி மன்னரின் கொடிவழியினர் பெண்ணின்ப வேட்கையாலும் தன்னாதிக்க வெறியாலும் இனத்தையும் மொழியையும் மண்ணையும் சீரழிக்க வந்த பகைகளிடத்து நெடுஞ்சாண் கிடையாக விழுந்து மண்டியிட்டு அடிமைப்பட்டுப் போயினர். தமிழினம் என்ற ஓர் இனம் இருக்கின்றதா என்று கேள்வி கேட்கும் அளவுக்குத் தமிழினம், தமிழினத்திற்குரிய அடையாளங்களோடு வாழாமற் பிற இனப் பண்பாட்டுத் தாக்கத்திற்கு ஆட்பட்டுத் தன்னை முற்றிலுமாக இழந்து கொண்டிருந்த வேளையில்தான் தென்றிசையில் ஒரு விடிவெள்ளி முளைத்தது.

கி.பி 1027 ஆம் ஆண்டுக் காலக்கட்டத்தில் இராசேந்திரசோழன் பல்லாயிரக் கணக்கான தீவுக் கூட்டங்களையும் தென்கிழக்காசிய நாடுகளையும் தன் கையகப்படுத்தியிருந்தான் என்று வரலாற்றுக் குறிப்புகள் காட்டுகின்றன. இருப்பினும் ஒரு பயனும் இல்லாமல் ஒரு வரலாற்றுப் பதிவாக மட்டுமே அது இருக்கின்றது. இன்று தமிழனுக்கு நாடு இல்லை, உலகின் மூத்த இனம், மூத்த மொழிக்குச் சொந்த இனம் நாடிழந்து நாதியற்றுக் கிடக்கின்றது. நாடு வேண்டுமென்று குரல் கொடுத்த அரசியலார் பலரும் பல்வேறு நயப்புக்களாலும் சூழ்ச்சிகளாலும் அரசியல் விரகுகளாலும் கொண்ட கொள்கைகளையெல்லாம் கைநெகிழ்த்து விட்டனர். தமிழினத்தை இன்று அழுத்திக்கொண்டிருக்கின்ற ஆதிக்கம் பெரும் பூதம் போன்றது. அதை எதிர்த்து வெற்றி பெற வேண்டுமெனில் எண்ணிப்பார்க்க முடியாத அளவு தன்னம்பிக்கையும் மனத்துணிவும் தமிழ்த் தலைமுறைக்கு வந்தாகல் வேண்டும்.

‘ பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை வெரூஉம் புலிதாக் குறின் என்கிறார் வள்ளுவர். ‘

யானை உருவத்தால் மிகப் பெரியது, கூரிய தந்தங்களை உடையது, ஆனால் புலி தாக்கினால் அது பயந்து ஓடும். எனவே வலிமையான ஒன்றை எதிர்க்க வேண்டுமெனிற் புலியைப் போன்ற துணிச்சல் வேண்டும் என்கிறார் வள்ளுவர். ‘உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை, அச்சமில்லை’ என்கிறான் பாரதி. அத்தகு துணிச்சல் தமிழனுக்கு வந்தாக வேண்டும். ஆனால் தமிழனின் நிலைமையோ பன்னூறு ஆண்டுகளாக அடிமைப்பட்டு, அடிமைப்பட்டு மரபணு அடிப்படையிற் கோழைமைத் தன்மையதாக மாறி இருக்கிறது. அஞ்சி நடுங்குவது, தனக்குள்ளே அடித்துக் கொள்வது, தன் பெருமை போற்றாமல் மாற்றான் பெருமை போற்றுவது இதுதான் தமிழனின் தற்கால நிலைமை.

இவற்றை மாற்றியமைக்க வேண்டுமானால் தமிழனுக்கு மரபணு மாற்றஞ் செய்யப்பெறுதல் வேண்டும். இத்தகு மரபணு மாற்றத்தைத் தமிழீழத் தமிழனுக்குச் செய்தவர் தான் மேதகு தலைவர் பிரபாகரன் அவர்கள். அஞ்சி அஞ்சிச் சாகும் நிலை மாறித் திரும்பி எதிர்க்கும் மன வலிமையையும் வல்லமையையும் தந்த விடுதலைத் தந்தைதான் பிரபாகரன். நான் தலைவர் பிரபாகரனைத் தமிழினத்தின் ஒட்டுமொத்த விடுதலைத் தந்தையாகப் பார்க்கிறேன். இன்று தமிழினத்தை அடிமை கொண்டிருக்கும் வல்லாண்மைகளை எதிர்த்து வெருட்ட வேண்டுமானால்,

1. ஆத வலிமை (ஆத்ம பலம்) பெற்றிருக்க வேண்டும்.

2. நுணுகிய போர்த்திறம் பெற்றிருக்க வேண்டும்.

3. சூழ்ச்சிகளை வெல்லும் நுண்ணறிவு பெற்றிருக்க வேண்டும்.

4. எதிர்ச் சூழல்களுக்குட் சிக்காமல் அவற்றைத் தகர்த்தெறிந்து ஏற்புடைய சூழல்களை உருவாக்க வேண்டும்.

5. நிறைந்த அரசியல் அறிவு பெற்றிருக்க வேண்டும்.6. அடிப்படையில் தமிழ்த் தேசிய உணர்வு பெற்றிருக்க வேண்டும்.

7. எந்தப் புகழ், ஆசை வலைக்குள்ளும் சிக்காமல் தன்னிலும் மேலான மொழியையும் இனத்தையும் நாட்டையும் நேசிக்க வேண்டும்.

8. உணர்ச்சிகளுக்கு ஆட்படாமல் ஆழ்ந்த தண்ணறிவு (நிதானம்) பெற்றிருக்க வேண்டும்.

9. அறத்தின் பால் நிற்பதோடு, விருப்பு வெறுப்பு அற்றிருக்க வேண்டும்.

10. எந்த வேளையிலும் விழிப்பாக இருக்க வேண்டும்.

11. எவரிடத்தும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இவற்றை ஒருங்கே ஒட்டுமொத்தமாகக் கொண்டிருக்கும் தனிப்பெருந் தலைவர்தான் பிரபாகரன். இந்திய உளவுப்படைத் தலைவரிடம் பிரபாகரன் கூறிய கருத்துக்களே இதற்கு ஏற்புடைய சான்றாகும். “நீங்கள் பலரையும் வென்றிருக்கலாம், அடிமைப்படுத்தியிருக்கலாம். ஆனால் என்னிடம் தான் தோற்கப் போகிறீர்கள். ஏனெனில் நான் உயிரின் மீது ஆசை இல்லாதவன். சொத்துச் சுகங்களின் மீது ஆசை இல்லாதவன். எவனுக்கு உயிரின் மீது ஆசை இருக்கிறதோ சொத்துச் சுகங்களின் மீது ஆசை இருக்கிறதோ அவன் மற்றவர்களுக்கு விலை போவான். மற்றவர்களால் விலைக்கு வாங்கப்படுவான், என்று கூறியதோடல்லாமற் சொல்லியபடியே இந்தியப் படையைப் பின்னங்கால் பிட்டத்தில் இடிபடத் தோற்று ஓடச் செய்தார். இயக்கத்தின் மீதும் தமிழ் மண்ணின் மீதும் தமிழீழ மக்களின் மீதும் அவர் கொண்டிருந்த பற்று அளப்பரியது.

தமிழ் மக்களின் உரிமையை மீட்டெடுத்துத் தமிழீழ மண்ணை விடுதலை பெற்ற மண்ணாக விடுவிப்பதே அவரின் உயிர்க்கொள்கை. இந்தக் கொள்கைக்கு முரணான எந்தச் சூழலையும் அவர் ஏற்றதில்லை. இந்தியப்படை தமிழீழ மண்ணை வலிந்து பிடித்து இறுகல் நிலையை ஏற்படுத்திய காலத்தில் இச்சூழலைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகக் கருவிகளை ஒப்படைத்து விடலாம் என்று பொறுப்பாளர் ஒருவர் கருத்துக் கூறியிருக்கிறார். ‘போராட்டத்தை நிறுத்திக் கருவிகளை ஒப்படைத்து விட்டால் தமிழ் மக்களின் உரிமைகள் என்னாவது’ என்று தலைவர் கேட்க, ‘அதனை இந்தியா பார்த்துக் கொள்ளுமாம்’ என்று பொறுப்பாளர் விடையிறுத்திருக்கிறார். இதனைக் கேட்ட தலைவர் ‘நான் இறந்த பின் இந்த இயக்கத்தைச் சில்லறையாகவோ ஒட்டுமொத்தமாகவோ விலைபேசி விற்றுவிடுங்கள்’ என்று கடிந்து இம்மியளவுகூடக் கொள்கை பிறழா மன உறுதியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

சூரியக்கதிர் நடவடிக்கையின் போது தலைவர் எடுத்த முடிவு மிகச் சிறப்புக்குரியது. காலத்தை எண்ணிப் பார்த்ததும் எதிரிகளின் முகத்திற் கரியைப் பூசியதும் உலகத்தையே வியக்க வைத்தன. எதிரி எதிர்பார்க்காத தாக்குதலை எதிர்பாராத நேரத்திற் தந்துவிடு என்பது பிரபாகரனால் வழங்கப்பட்ட போர் உத்தி. அன்று புலிகளை இழிவுபடுத்திப் பேசிய மேதாவிகளெல்லாம் இன்று மூச்சுப் பேச்சில்லாமல் இருக்கின்றனர். தொடர்ந்தாற் போல, ஓயாத அலைகள்-1, ஓயாத அலைகள்-2, ஓயாத அலைகள்-3 தலைவர் பிரபாகரனின் மிக நுட்பமான போர்த்திறத்தை உலகுக்கு வெளிக்காட்டி உலகத் தமிழரின் தலைகளை நிமிர்த்தியவை.

கருவி ஏந்திய போரில் மட்டுமன்றி அறிவாண்மையைப் பயன்படுத்தும் அரசியற் போரிலும் தலைவர் மன்னாதி மன்னரையெல்லாம் நிலைகுலையச் செய்து வருகின்றார். 2003 ஆம் ஆண்டு அவரைப் பார்த்து உரையாடும் வாய்ப்பு எமக்குக் கிட்டியது. அவரின் உள்ள வேட்கையினை நேரடியாகவே கேட்டு உரையாடினேன். அவரோடு உரையாடிய போது கூறிய கருத்துக்களிற் சில, “நான் ஏன் இந்தப் படையுடையை உடுத்திக் கொண்டு இங்கு வந்திருக்கிறேன் தெரியுமா? உலகத்தில் எல்லாத் தமிழரும் எல்லா உடைகளையும் அணிந்திருக்கின்றனர். அவர்கள் அணியத் துணியாதது இந்த உடைதான். அதனால் தான் நான் அணிந்திருக்கிறேன். மலேசியத் தமிழர்கள் ஒற்றுமையோடு இருக்க வேண்டும். வலிமையோடு இருக்க வேண்டும். சிறுசிறு பொருளியற் கூட்டுறவுத் திட்டங்களின் வழி தங்கள் பொருளியல் வலுவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.

தமிழ்த் தேசிய உணர்வோடு வாழ வேண்டும். ஆரியர்கள் தமிழர்களை அரக்கர்கள் என்றும் அசுரர்கள் என்றும் பழித்து எழுதியிருக்கின்றனர். புராணத்தில் அசுரர்களைக் கருப்பர்களாகவும் தடித்த மீசை உடையவர்களாகவும் காட்டியுள்ளனர். யார் அப்படி இருக்கிறார்கள். நாம் தானே. தமிழர் கொண்டாட வேண்டிய விழா பொங்கலே. இவ்வாறு பல அரிய செய்திகளைச் சொல்லிக் கொண்டிருந்தார். அவரைச் சந்தித்து உரையாடிய அந்த வாய்ப்பினை என் வாழ்நாளிற் கிடைத்தற்கரிய பேறாக நான் கருதுகின்றேன். அவருடைய பேச்சும் குரலும் மென்மையானவையாகவும் அன்புமயப்பட்டவையாகவும் இருந்தன.

கைகள் மென்மையாகப் பூப்போன்றிருந்தன. ஆனால் அவருடைய உள்ளமும் உணர்வும் அசைக்க முடியாத உறுதி வாய்ந்திருந்தன. அவரின் விழிகள் ஒளியுமிழ்கின்றனவாகவும் கூரியனவாகவும் இருந்தன. தமிழனுக்குக் கிடைத்த அத்தவமகனைச் சந்தித்து உரையாடியது கழிபேருவகையையும் பெருமையினையும் எனக்களித்தது. அவர் காலத்தால் தமிழருக்கு அளிக்கப்பட்ட தனிப்பெருங்கொடை. அப்பெருங் கொடையை உலகத் தமிழினம் கண்ணேபோற் பொன்னேபோற் போற்றிப் பாதுகாக்கவேண்டும். புலிகளின் வேட்கையினை வெற்றி பெறச்செய்ய அனைத்தாலும் உதவவேண்டும்.

‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’

எழுத்தாளர், உதவி ஆசிரியர்,

செம்பருத்தி,மலேசியா.

இரா.திருமாவளவன்