சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் பதுக்கியுள்ள வெளிநாட்டினர்களின் பணம் தொடர்பான தகவல்களை அந்நாட்டு அரசாங்கத்திடம் பகிர்ந்துக் கொள்ள முடிவு செய்துள்ளதாக சுவிஸ் அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
சர்வதேச அளவில் வரி ஏய்ப்பு மற்றும் ஊழல் செய்து சட்டத்திற்கு விரோதமாக சேமித்த பணத்தை சுவிஸ் வங்கியில் பதுக்கி வருவதால் பல நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி வருகின்றன.
மேலும், இதுபோன்ற முறைகேடாக பணம் பதுக்கியுள்ளவர்களை பற்றி தகவல்களை சுவிஸ் அரசு தர மறுத்து வந்ததால் அந்நாட்டு அரசு கடுமையான விமர்சனங்களையும் சந்தித்து வந்துள்ளது.
இந்நிலையில், சுவிஸ் வங்கியில் உள்ள ரகசிய கணக்குகள் தொடர்பான தகவல்களை பகிர்ந்துக்கொள்ள தயார் என சுவிஸ் அரசு தற்போது அதிரடியாக அறிவித்துள்ளது.
சுவிஸ் நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தகவல்களை பகிர்ந்துக்கொள்ளும் AEOI-ன் விதிமுறைகள் அடிப்படையில் அர்ஜெண்டினா, பிரேசில், மெக்சிகோ, உருகுவே, இந்தியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 22 நாடுகளுடன் பகிர்ந்துக்கொள்ள முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கை தொடர்பான செயல் திட்டங்கள் 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கும் என்றும், இதற்கு ஒரு ஆண்டுக்கு பிறகு ஒவ்வொரு நாட்டு அரசாங்கத்திடம் ரகசிய கணக்குகள் தொடர்பான தகவல்கள் பகிர்ந்துக்கொள்ளப்படும் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நிதி அமைச்சகத்தின் இந்த அறிவிப்பை தொடர்ந்து பல ஆண்டுகளாக சுவிஸ் வங்கியில் வைக்கப்பட்டுள்ள ரகசிய கணக்குகள் தொடர்பான மர்மம் விலக உள்ளது குறிப்பிடத்தக்கது.