மாவீரர் தினம் அனுஸ்டித்த இளைஞர் கொலை – பிடியாணை பிறப்பித்தார் நீதிபதி

409 0

ilancheliyanசுன்னாகம் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்ட இளைஞர் ஒருவர் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்குடன் சம்பந்தப்பட்ட சாட்சிகளின் வாக்குமூலங்கள் நிறைவடையும் வரை, கைதான காவல்துறை சந்தேகநபர்களுக்கு பிணை வழங்க முடியாது என, யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்தார்.

2010 நவம்பர் 26ஆம் திகதி மாவீரர் தினத்தை அனுஸ்டித்தனர் என்ற குற்றச்சாட்டில் சுன்னாகம் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்ட பின் இளைஞர் ஒருவர் மரணமடைந்ததாக கூறப்படுகின்றது.

இந்தநிலையில், அவருடன் கைதுசெய்யப்பட்ட ஏனைய சந்தேகநபர் இருவரையும் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என, காவல்துறையினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இது தொடர்பான விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேகநபர்கள் இருவரும் சாட்சியமளித்தனர்.

அதில், தாம் சம்பவம் நடந்த தினத்தன்று மாவீரர் தினத்தை அனுஸ்டித்தனர் எனத் தெரிவித்து கைது செய்யப்பட்டு கொடுமையான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டதாகவும், இதில் ஒருவர் மரணமடைந்து சடலத்தை இரணைமடு குளத்தில் காவல்துறையினர் வீசியதாகவும் தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில் சந்தேகநபர்கள் எட்டுப்பேரும் யாழ் மேல் நீதிமன்றில் நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதேவேளை, 7வது எதிரியாகக் கருதப்படும் விஜயரட்ணம் கோபிகிருஸ்ணன் என்ற காவல்துறை அதிகாரி தற்போது கனடாவில் வசித்துவருவதனால் அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை என அரச தரப்பு சட்டத்தரணியால் தெரிவிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் குறித்த நபர் மீது சர்வதேச பிடியாணையை நீதிபதி பிறப்பித்ததுடன் அந்த பிடியாணை காவல்துறைமா அதிபர் ஊடாக சர்வதேச காவல்துறையினருக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.