உன்னத மாவீரர் தாள் பணிவோம் !தலைநகர் தந்த கவி.

193 0
கார்த்திகைப் பூக்களின் மலர்வுகள் யாவிலும்
மாவீரர் எழுச்சியின் மறம் தோன்றும் !
உலகமே வியந்த ஈழத்தின் போரிலே
தோன்றிய தியாக ஒளி தோன்றும் !
கருமைக்குள் ஆழ்ந்தே தீயாகிக் காத்த
கருமுக நெருப்பின் அனல் தோன்றும் !
கல்லறை எங்கினும் பெயரதைப் பொறிக்காத
மாவீரத் தெய்வங்கள் சுடர் தோன்றும் !
ஆழ்கடல் நடுவிலே கருநீல மறவர்கள்
சிதறியே வெடித்திடும் தீ தோன்றும் !
சூழ்கின்ற பகைவரின் குண்டுகள் யாவையும்
ஏந்தியே மாண்டவர் நிரை தோன்றும் !
வானினைக் காத்திட விண்ணிலே பறந்தவர்
வீரராய் வெடித்திடும் இடி கேட்கும் !
வேவுகள் பார்க்கையில் பாம்புகள் தீண்டிட
மௌனமாய் மரித்தவர் நுரை தோன்றும் !
எல்லையை காத்திட சாமியாய் சென்றவர்
எல்லையில் கல்லான தூண் தோன்றும் !
துணையாக முன்வந்து தோளோடு மண்சுமந்து
விதையாகி புதைந்தவர் உரம் தோன்றும் !
ஆழ்மனம் யாவிலும் ஒளிரான வீரர்கள்
அழியாத சுவடுகள் நிமிர்ந்து எழும் !
மனக்கோவில் தனிலே இறையாகி ஆழ்த்திடும்
மாவீர சக்திகள் அருள் சுரக்கும் !
ஈழத்தை மீட்டிட உயிரதை ஈந்தவர்
இலக்கினை ஏற்றியே முன் செல்வோம் !
உறுதியில் ஊன்றியே இறுதியை வென்றிட
உன்னத மாவீரர் தாள் பணிவோம் .

தலைநகர் தந்த கவி.