ஊழல், மோசடிகளுக்கு முட்டுக் கொடுத்து, அடிமட்ட அரசியல் நடத்தும் நிலைக்கு, இராதாகிருஷ்ணன் தள்ளப்பட்டுள்ளார்

230 0
மலையக கல்வித்துறைக்கு, கல்வி இராஜாங்க அமைச்சராக இருந்த காலத்தில் பாரியளவு சேவையைச் செய்வதற்குக் கிடைத்த வாய்ப்பை முழுமையாகத் தவிறவிட்டவரே, முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் என்று, முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் குற்றஞ்சாட்டியுள்ளா்.

இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்துள்ள அவர், வலயக்கல்வி காரியாலயங்களில் காணப்படும் ஊழல், மோசடிகளுக்கு முட்டுக் கொடுத்து, அடிமட்ட அரசியல் நடத்தும் நிலைக்கு, இராதாகிருஷ்ணன் தள்ளப்பட்டுள்ளார் என்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அப்போதைய இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணின் அணியுடன் இணைந்து, நயவஞ்சகமாக, மாகாணசபைத் தேர்தல்களைத் தள்ளி வைத்த பின்புதான், மத்திய மாகாண தமிழ்க்கல்வித் துறையில் அதிக அளவு அரசியல் தலையீடுகள் தலைவிரித்தாடியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இவருடைய பதவி காலத்தில், பல மோசடிகள இடம்பெற்றிருந்ததைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், சரியான தகுதி இல்லாதவர்களுக்கு பதவிகளை வழங்கியமை குறித்து, முன்னாள் இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் தெளிவுபடுத்தவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர், மத்திய மாகாணக் கல்வித் துறையின் வளர்ச்சிக்குக் குரல் கொடுக்க வேண்டுமே தவிர, தகவல்களைச் சரியாக அறிந்துகொள்ளாமல், தனிப்பட்ட ஒருவருக்காக அறிக்கை விடுவது பொருத்தமற்றதாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வலயக்கல்வி பணிமனை, இரவு நேர மதுபான விடுதியாக மாற்றப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டிய அவர், கல்வி காரியாலயத்தில் குடித்துவிட்டு கும்மாளம் அடிக்கும் கூட்டம் பற்றியெல்லாம் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரின் கண்ணுக்கு தெரியவில்லையா என்றும்  கேள்வியெழுப்பியுள்ளார்.

கல்வி இராஜாங்க அமைச்சராக இராதாகிருஷ்ணனின் பதவி காலத்தில், எத்தனை பேர் ஆசிரியராக நியமிக்கப்பட்டார்கள், நல்லாட்சி அரசாங்கம் அமைந்த உடனேயே, மலையகத்தில் பல்கலைக்கழகம் அமைக்கப் போவதாக கூறி, அமைச்சரின் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதா என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

அத்துடன், முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் பெற்றுக் கொடுத்த ஆசிரியர் உதவியாளர்களை, நிரந்தர ஆசிரியர் சேவைக்கு உள்வாங்க முடியாத இராஜாங்க அமைச்சர் இன்று அரசியல் தலையீடு குறித்து பேசுவது வேடிக்கையானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னைய அரசாங்கம் நாடளாவிய ரீதியில் அறிமுகப்படுத்திய, அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்றத் திட்டத்தின் கீழ், மலையகத் தமிழ் பாடசாலைகளில் கட்டப்பட்ட பல கட்டடங்க, அரைகுறையாகக் காணப்படும் நிலையில், அவற்றைக் கூட முழுமையாக முடித்துக்கொடுக்க முடியாத அவர், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் முயற்சிகளை குறைகூறி வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.