சந்தை வாய்ப்பின்மை: யாழ். மீனவர்கள் தொழிலுக்குச் செல்லத் தயக்கம்

261 0

போதிய சந்தை வாய்ப்பின்மையால் யாழ்.மீனவர்கள் கடற்றொழிலுக்குச் செல்வதைத் தவிர்த்து வருகின்றனர் என கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
குடாக்கடலில் கடற்றொழிலுக்குச் செல்லும் 50 சத வீத மீனவர்கள் தொழிலுக்குச் செல்வதைத் தவிர்த்து வருகின்றனர்.

கொரோனாத் தொற்றுக் காரணமாகத் தென் பகுதிக்குக் கடலுணவு ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் பிடிபடும் கடலுணவுகள் போதிய சந்தை வாய்ப்பின்றித் தேங்கிக் காணப்படுகின்றன. அதனால் உள்ளூர் சந்தைகளில் நண்டு, இறால், கணவாய் போன்றவை கிலோ 400 ரூபாக்கும் குறைவாக விற்பனை செய்யப்படுகின்றன.

இதேவேளை தென்பகுதியில் மீன் சந்தையில் இருந்து கொரோனாத் தொற்று ஏற்பட்டமையால் மக்கள் கடலுணவைக் கொள்வனவு செய்யத் தயக்கம் காட்டி வருகின்றமையாலும் உள்ளூர் சந்தைகளில் கடலுணவுக்கான கேள்வியும்
குறைவடைந்துள்ளது. அதனால் சந்தைகளில் விற்பனை குறைவடைந்துள்ளது.

இவ்வாறான காரணங்களால் தொழிலுக்குச் செல்வதற்கு மீனவர்கள் விரும்பாது தவிர்த்து வருகின்றனர் எனத் தெரிவித்தார்.