வலி சுமந்த வலிகாம இடப்பெயர்வுக்கு 25 ஆண்டுகள் நிறைவு

744 0

இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய இடப்பெயர்வாகக் கருதப்படும் யாழ்ப்பாணம் வலிகாமம் மக்கள் இடம்பெயர்ந்து இன்றுடன் 25 வருடங்கள் பூர்த்தியாகின்றன. 1995ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி வலிகாமம் மக்கள் தென்மராட்சிக்குள் இரவோடு இரவாகத் தஞ்சமடைந்தனர்.


சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை மூலம் இராணுவத்தினர் வலிகாமம் மண்ணை தனது பூரண கட்டுப்பாட்டில் கொண்டுவர சுமார் 5 இலட்சம் மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்தனர்.


சொந்த வீடுகளை இழந்து, உடைமைகளைப் பறிகொடுத்து இடம்பெயரும்போது தமது உறவுகளையும் இழந்து தமது பூர்வீக நிலங்களை விட்டு வெளியேறிய நாள் இன்றாகும்.

அன்றைய போர் கால சூழ்நிலையில் இந்த அவலத்தைச் சந்தித்த பலர் திக்கு திசைமாறி வேறிடம் சென்றது ஒருபுறமிருக்க பலர் உயிருடன் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


கால் நூற்றாண்டைக் கடந்து நிற்கும் இந்த வலி சுமந்த இடப்பெயர்வும் அதன் பின்னரான அவலங்களும் அதை அனுபவித்த யாழ். தமிழ் மக்களுக்கு என்றும் நீங்காத நினைவாகும்.