தமது உடைமையில் ரூபா 5.5 மில்லியன் பெறுமதியான 150 கிராம் ஹெரோயின் மற்றும் 6 கிலோகிராம் கஞ்சா போதைப்பொருளை வைத்திருந்த ரியூசன் ஆசிரியர் மற்றும் இருவர் நீர்கொழும்பில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ரியூசன் ஆசிரியரின் முன்னாள் மாணவர் என்பதுடன் அவர் மட்டக்குளி ரொக்ஹவுஸை வதிவிடமாகக் கொண்டவராவார்.
ஆரம்பத்தில் தகவல் ஒன்றைத் தொடர்ந்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது தண்டுகம பாலத்தில் வைத்து ரியூசன் ஆசிரியர் கைது செய்யப்பட்டதுடன் மற்றைய இருவரும் சற்று நேரத்தின் பின் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்கள் சிலாபம் – புத்தளம் பிரதேசத்தின் போதைவஸ்து விநியோகஸ்தர்களாக அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் கொழும்பிலிருந்து சிலாபம் நோக்கிச் சென்றுகொண்டிருக்கையில் ஒரு தகவலைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டனர்.

பொலிஸாரின் தகவல்படி இக்குழு கணிசமான காலம் இப்போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
ரியூசன் ஆசிரியர் தனது இளம் மனைவிக்கு ஹைபிரைட் கார் ஒன்றை வாங்குவதற்காக போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக பின்பு பொலிஸாரிடம் தெரிவித்தார்.
சந்தேக நபர்களிடம் இருந்து ஒரு கார், ஒரு மோட்டார் சைக்கிள், அளவிடும் அளவு கருவிகள் மூன்று மற்றும் நான்கு கைத்தொலைபேசிகள் என்பன பறிமுதல் செய்யப்பட்டன.
மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பிரதேச பிரதம சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் சமன் சிகெராவின் அறுவுறுத்தலுக்கமைய நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

