விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இலங்கை

291 0

gammanpilaவடக்கு, கிழக்கு மாகாணங்களை கைப்பற்றுவதே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரது நோக்கமாக இருந்த போதிலும், இன்று முழு இலங்கையையும் தமிழீழ விடுதலைப் புலிகள் கைப்பற்றி கட்டுப்படுத்திக் கொண்டிருக்கின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் கைது செய்யப்பட்டமை தொடர்பாகவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சி தமது கடும் எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளது.

ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும, உதய கம்மன்பில, ரஞ்சித் த சொய்ஸா உள்ளிட்டோர் கலந்துகொண்ட ஊடகவியலாளர் சந்திப்பு இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்றது.

இதன்போது கருத்துத் தெரிவித்த பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில,

“விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற கருணா அம்மான் அரச வாகனத்தை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். யார் இந்த கருணா அம்மான்? அன்று அங்குலிமாலா, கெப்பட்டிபொல போன்றவர்களைப் போன்று இருளிலிருந்து வெளிச்சத்திற்கு வந்தவர்.

பிழையான வழியிலிருந்து சரியான வழிக்கு வந்தவர். கிழக்கு மாகாணத்தை கைப்பற்றிக் கொள்ளும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரயத்தனத்தில் கருணா அம்மானும், பிள்ளையானும் முக்கிய பங்காற்றினர்.

இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரத்தின் பங்காளர்களில் ஒருவராக கருணா இருக்கின்றார்.

இன்றைய அரசாங்கத்தில்  அவர் நல்லிணக்க ஆலோசகராகவும், குறைந்த பட்சம் வெளிவிவகார அமைச்சருக்கு நெருக்கமான ருத்ரகுமாரன், சுரேன் சுரேந்திரனைப் போன்றவர்களைப் போல வரப்பிரசாதங்களை அனுபவித்திருக்கலாம்.

தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து அரசாங்கத்துடன் இணைந்து கொண்டதாலேயே கருணா அம்மான் இன்று சிறைவைக்கப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் விசேட அதிரடிப் படையின் முன்னாள் பிரதானியும் வாகன முறைகேட்டுப் பாவனை குற்றத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஆனால் விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் மற்றும் இதர விடயங்களில் ஈடுபட்டு பாரதூர தண்டனைகளை பெறுவதற்கு ஈடானவர்களுக்கு வழக்கு தொடராமல் விடுதலை செய்வதற்காக சட்டமா அதிபர் நடவடிக்கை எடுத்துவரும் நிலையில்தான் விசேட அதிரடிப் படையின் முன்னார் பிரதானியும், கருணா அம்மானும் கைது செய்யப்பட்டார்.என்று குறிப்பிட்டுள்ளார்.