இது மேற்கில் தோன்றும் உதயம்

363 0

உள்நாட்டவர், வெளிநாட்டவர் எனப் பலராலும் எதிர்பார்க்கப்பட்ட பொதுத் தேர்தல் முடிவுகள் வெளி வந்து விட்டது. எதிர்பார்க்கப்பட்டது போவே ராஐபக்ச அரசாங்கம் அபார வெற்றி படைத்து உள்ளது.

இலகுவான மூன்றில் இரண்டைப் பெற்று விட்டது. பாரம்பரிய பழைமை மிக்க ஐக்கிய தேசியக் கட்சி உட்பட பல கட்சிகள் முகவரிகளைமுற்றாகவே இழந்து விட்டன.

இதே வேளை தமிழரசுக் கட்சி தலைமையிலான தமிழ்க் கூட்டமைப்பு வடக்கு கிழக்கில் தோல்வி கண்டுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தேசியப் பட்டியல் உள்ளடங்களாக 16 ஆசனங்களைப் பெற்ற கூட்டமைப்பு இம்முறை 10 ஆசனங்களையே வெற்றி கொள்ள முடிந்தது.

இவ்வாறான சூழ்நிலையில் யாழ், கிளிநொச்சி தேர்தல் தொகுதியிலிருந்து ஏழு(07),வன்னித் தேர்தல் தொகுதியிலிருந்து நான்கு(04), திருகோணமலையிலிருந்து ஒன்று(01) மட்டக்களப்பிலிருந்து ஐந்து(04)என 16 பேர் தெரிவு செய்யப்பட்டனர்.

கூட்டமைப்பிற்கும்,தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் தலா ஒன்று வீதம் தேசியப் பட்டியல் ஊடாக இரண்டு(02) எனவும் மொத்தமாக 18 தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் வடக்கு கிழக்கிலிருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு உள்ளனர்.

இதில் கூட்டமைப்பிலிருந்து 10 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிருந்து 02 மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் கூட்டணியில் 01 என 13 உறுப்பினர்கள் தமிழ்த் தேசியத்தை வெளிப்படையாக நேசிப்பவர்களாக உள்ளனர்.

மிகுதியாக யாழ்ப்பாணத்தில் அங்கஐன் மற்றும் டக்ளஸ் தேவானந்தா வன்னியில் ஈ.பி.டி.பியைச் சேர்ந்த திலீபன் மட்டக்களப்பில் வியாழேந்திரன் மற்றும் பிள்ளையான் என்று அழைக்கப்படுகின்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் என ஐந்து பேர் உள்ளனர்.

இவர்கள் அடிப்படையில் தமிழர்கள் இவர்களும் தமிழ்த் தேசியத்தை நேசிப்பார்கள். ஆனாலும் வெளிப்படையில் தமிழ்த் தேசியத்தை நேசிப்பாவர்களாக யாழ்ப்பாணத்திலோ வன்னியிலோ மட்டக்களப்பிலோ அல்லது கொழும்பிலிலோ கதைக்க முடியாது.

ஏனெனில் இவர்கள் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களாகவும் ஆளும் கட்சியை சார்ந்தவர்களாகவும் உள்ளனர். இந்த ஐந்து பேரும் ஆளும் கட்சியின் விசுவாசிகளாக இருந்தாலும் ஆளுக்கொரு கட்சியிலும் ஆளுக்கொரு திசையிலுமே இருந்துள்ளனர். ஒரு குடையின் கீழ் இருந்தாலும் இனி மேலும் அவ்வாறாகவே பயனிப்பதற்கான வாய்ப்புக்களே உள்ளன.

இந்நிலையில் எதிர்வரும் காலங்களில் தமிழர் பிரச்சினைகள் குறித்து இவர்களுடன் பேசவே அரசாங்கம் விரும்புகின்றது. அதனை அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்கள் வெளிப்படையாகவும் சொல்லி உள்ளார்கள்.

ஆயுதப் போராட்டம் மௌனம் கண்ட நாளிலிருந்து தமிழ்க் கூட்டமைப்பே தமிழ் மக்களின் (ஏக) பிரதிநிதிகளாக இருந்தனர். அதற்கு ஏற்றால் போல தமிழ் மக்களது அதிகப்படியான ஆதரவுடன் கூடுதலான ஆசனங்களையும் அவர்கள் தம் வசம் கொண்டிருந்தனர்.

இதனை சிங்கள அரசாங்கங்கள் விரும்பாது விரும்பவில்லை. ஆகவே கூட்டமைப்பை உடைப்பதற்கு பல வழிகளையும் உத்திகளையும் கையாண்டனர். அந்த முயற்சி பாரிய அளவில் முயற்சி அளிக்கவில்லை.

இற்றிலையில் கொடூர யுத்தத்தினால் ஒட்டுமொத்தமாகச் சீரழிந்து போய்க் கிடக்கும் மக்களை இயல்பு நிலைக்கு கொண்டு செல்ல தமிழ்ப் பிரதேச அபிவிருத்தி மற்றும் தமிழ் மக்களுக்கான வேலை வாய்ப்பு விடயங்களில் கவனம் செலுத்த கூட்டமைப்பினரால் பதினொரு ஆண்டுகளாக முடியவில்லை அல்லது முயலவில்லை.

கூட்டமைப்பினர் உரிமை அரசியல் பற்றியே தொடர்ந்து பேசிக் கொண்டு இருந்தார்கள். அதிலும் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதான பங்கு வகித்து வந்தார்கள். பல பலமான அமைச்சுக்கள் வைத்திருந்தமை போன்று ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் வீற்றிருந்தார்கள். ரணில் தலைமையிலான அமைச்சரவைக்கு பல தடவைகள் வந்த ஆபத்தக்களையும் தடுத்து நிறுத்தினார்கள்.

ஆனால் ஊரில் தமிழ் மக்களது நாடித் துடிப்பை பிடித்துப் பார்க்கத் தவறி விட்டார்கள். மக்கள் என்ன பேசிக் கொள்கின்றார்கள் என்பதை கண்டு கொள்ளவில்லை அல்லது கண்டுகொண்டாலும் கணக்கெடுக்கவில்லை. தங்களது கட்சி சார்பில் தும்புத்தடியை நிறுத்தினாலும் வெற்றி பெறும் என்ற மமதையில் இருந்தார்கள் இன்று மண் கவ்வி விட்டார்கள்.

இதுவே கூட்டமைப்பு மீது தமிழ் மக்களுக்கு வெறுப்பு எற்பட்டது. அதுவே கூட்டமைப்பிற்கு எதிரான வாக்காகத் திரும்பியது. அதனையே அந்த ஐவரும் (நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஐன், டக்ளஸ் தேவானந்தா, திலீபன், வியாழேந்திரன், பிள்ளையான் தமக்கு ஆதரவான வாக்காக மாற்றிக் கொள்ள முயன்றார்கள் ஈற்றில் வெற்றியும் பெற்றார்கள்.

அத்துடன் அங்கஐன் யாழ்ப்பாணத்திலும் பிள்ளையான் மட்டக்களப்பிலும் விருப்பு வாக்கிலும் முதல் நிலையில் உள்ளனர். வடக்கில் யாழ்ப்பாணம் கிழக்கில் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களேதமிழ் மக்கள் அதிகப்படியாக வாழும் மாவட்டங்கள் ஆகும்.

இதுவரை காலமும் உரிமை அரசியலுடன் மட்டுமே இரண்டறக் கலந்திருந்த தமிழ் மக்கள் இன்று அபிவிருத்தி வேலைவாய்ப்பு என சற்றுத் தடம் மாற அவர்களது வறுமையும் அறியாமையும்காரணம் எனலாம். ஒருபடி மேலாக இவற்றினைப் புரிந்து கொள்ளாத கூட்டமைப்பும் காரணம் ஆகும்.

ஏனெனில் இயல்பு நிலை தமிழர் பகுதிகளில் திரும்பியிருப்பதாகக் திரும்பத் திரும்பக் கூறினாலும் அது கடந்த பத்து ஆண்டுகளாகதமிழ் மக்களது வாழ்வியலில் பாரிய மாற்றங்களைக் கொண்டு வரவில்லை. வீழ்ந்து கிடப்பவனை தூக்கி நிறுத்தவில்லை.

மீண்டும் மீண்டும் வறுமைக்குள் உ(சு)ழன்ற தமிழ் மக்கள் அரச சார்பு நாடாளுமன்ற உறுப்பினர்களாலேயே தங்களுக்கு ஏதேனும் விமோசனம் கிடைக்கும் எனக் கருதியிதில் தப்பில்லை.

இதனை விட முள்ளிவாய்க்கால் கொடூரம் நடந்த வேளை பத்து வயதுப் பாலகனாக இருந்த சிறுவர்கள் இன்று 20 மற்றும் 21 வயது வாலிபார்களாக முதற் தடவையாக வாக்களித்து உள்ளனர். இவர்கள் கடந்த பத்து ஆண்டுகளாகக் கடந்து வந்த பாதை முற்றிலும் வித்தியாசமானது.

அவர்கள் இராணுவ சுற்றிவளைப்புக்களுக்கள் அகப்படாதவர்கள், அடையாள அட்டையைக் காட்டி ஒவ்வொரு தடை முகாம் முன்பாக பயனிக்காதவர்கள்இ அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக் கொள்ள குடும்ப அட்டையுடன் வரிசையாகக் நிற்காதவர்கள்.

ஒட்டுமொத்தத்தில் நேரடியாக விபரம் புரிகின்ற போது போரைப் பார்க்காதவர்கள்.வலியையும் வேதனையையும் அவர்கள் புரிந்திருந்தாலும் அறிந்திருந்தாலும் இன்றைய நிலையில் அவர்களில் பலர் இன்று வேலைவாய்ப்புக்களைத் தேடிக் கொண்டிருக்கும் இளைஞர்கள் யுவதிகள் ஆவார்கள்.

அவர்களது தேவை தொழில் வாய்ப்புக்கள் ஆகும். அவர்களது பார்வையில் அது பிழையும் அல்ல அநியாயமான கோரிக்கையும் அல்ல. ஆகவே இவர்களும் அரச சார்பு நாடாளுமன்ற உறுப்பினர்களாலேயே தங்களுக்கு ஏதேனும் விமோசனம் கிடைக்கும் எனக் கருதியிதில் தப்பில்லை.

இதற்கும் மேலதிகமாக ஒரு நடுத்தர வயதுடைய பெண் ஒருவருடன் தேர்தல் தொடர்பில் உரையாடிய போது நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள் எனக் கேட்டேன். அவர் சஐித் பிரேமதாசாவிற்கு வாக்களித்ததாகக் கூறினார்.

ஏன் அவருக்கு வாக்களித்தீர்கள் எனக் கேட்ட போது சஐித் வீடமைப்பு அமைச்சராக இருந்த போது பல ஆயிரம் வீடுகளைக் கட்டிக் கொடுத்ததாகவும் அவர் ஆட்சிக்கு வந்தால் இனியும் கட்டிக் கொடுப்பார் என்றும் குடியிருக்க சொந்த வீடு இல்லாத எனது சோகம் எனக்கு மட்டுமே புரியும் என்றார். ஆகவே இவர்களும் அவ்வாறான அரச சார்பு நாடாளுமன்ற உறுப்பினர்களாலேயே தங்களுக்கு ஏதேனும் விமோசனம் கிடைக்கும் எனக் கருதியிதில் தப்பில்லை.
ஆகவே கொடும் போரால் வெந்து போன தமிழ் மக்களது பலவீனங்களே வென்றவர்களது பலமானது. அதனாலேயே அவர்கள் நாடாளுமன்றம் சென்று உள்ளார்கள். தமிழ் மக்களது உரிமை சார்ந்த விடயங்களை இவர்களும் தொடர்ந்திருப்பின் தோல்வி அடைந்திருக்கலாம்.

இலகுவான மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி பீடம் ஏறிய சிங்கள பேரினவாத அரசாங்கம் தனது நிகழ்ச்சி நிரலை ஆரம்பித்து விட்டது. அதில் முதலில் பலியாக்கப்பட்டதே 19 ஆவது திருத்தச்சட்டம் ஆகும்.

இதனை அடுத்து தமிழ் மக்கள் மீது பேரினவாதம் பாயவுள்ள வேளையில் இவர்கள் ஐவரும் என்ன செய்யப் போகின்றார்கள்? நியாயத்தை தட்டிக் கேட்பார்களா? அநியாயத்தை தடுத்து நிறுத்துவார்களா?

துர்க்கா…