சிறிலங்காவில் புதிய முகத்துவார சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் நிறைவு

253 0

சிறிலங்காவில் கொழும்பு வடக்கு பகுதியில் நீண்ட காலமாக நிலவிய வெள்ள அனர்த்த நிலைமையைக் கட்டுப்படுத்தும் வகையிலான நிரந்தர தீர்வாக புதிய முகத்துவாரம் சுரங்கப்பாதை நிர்மாண பணி நேற்று (21) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையின் கீழ் நிறைவடைந்துள்ளது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கொழும்பு பெருநகரை அண்மித்த நகர அபிவிருத்தி திட்டமாக இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.

அலுத் மாவத்தை பிரதான கால்வாயுடன் இணைக்கப்பட்டு ஆரம்பமாகும் இந்த சுரங்கப்பாதை புதிய முகத்துவாரம் பகுதி ஊடாக நிலத்தடி வழியாக சென்று முகத்துவாரம் மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் கடலுக்கு திறக்கப்படுகிறது.

நிறைவு செய்யப்பட்ட சுரங்கப் பாதையின் நீளம் 778 மீட்டராகும். 3 மீட்டர் விட்டம் கொண்ட சுரங்கப் பாதையின் உள்ளே ஒரு திடமான கொன்கிரீட் புறணி அமைக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் நிறைவில், ஒரு நிலத்தடி சுரங்கப்பாதை என்ற வகையில் வினாடிக்கு 15,000 லீட்டர் நீர் கடலுக்குள் விடப்படும்.

புதிய முகத்துவாரம் சுரங்கப் பாதை கட்டுமானம் சைனா பெட்ரோலியம் பைப்லைன் என்ஜினியரிங் கம்பனி லிமிடெட் மேற்கொண்டது. கட்டுமான மேற்பார்வை யூஷிங் என்ஜினியரிங் கார்ப்பரேஷன் லிமிடெட்டினால் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவா, பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த, இலங்கைக்கான சீனத் தூதர் ஹூ-வே மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சிறிநிமல் பெரேரா ஆகியோர் கலந்துக் கொண்டனர்.