வடக்கில் சட்ட விரோத செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும்

238 0

வட மாகாணத்தில் சட்ட விரோத செயல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். சட்டமும் ஒழுங்கும் பாதுபாக்கப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுநர் திருமதி.பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பில் பாதுகாப்புச் செயலாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் பாதுகாப்புச்செயலாளர் சுதந்திரமானதும், பாதுகாப்பனதுமான சூழலை உருவாக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாகவும் உறுதியளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளர்.

முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரியின் புதிய வகுப்பறைக்கட்டடத்தை வட மாகாண ஆளுநர் திருமதி.பீ.எஸ்.எம்.சாள்ஸ் உத்தியோக பூர்வமாக நேற்று 21-8-2020 திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வட மாகாணப் பிரதம செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர், வலயக் கல்விப் பணிப்பாளர், கோட்டக்கல்விப் பணிப்பாளர், கல்வித் திணைக்கள உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர் மேலும் தெரிவிக்கையில் குறியதாவது:

;இப்பாடசாலையிலிருந்து அதிகளவு மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு குறிப்பாக யாழ் பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்கப்படுகிறார்கள். எனவே, இப்பாடசாலை பல்கலைக்கழக மட்டத்திலே பிரபலமடைந்த ஒரு பாடசாலையாகத் திகழ்கின்றது. யுத்த காலத்தில் தனது பெருமையை இழந்த இப்பாடசாலை தற்போது முன்னேற்றப்பாதையிலே சென்று இழந்த அதன் பெருமையையும் புகழையும் மீண்டும் பெறவேண்டுமென்பதே எங்களது விருப்பமாக இருக்கின்றது. அதற்காக இப்பாடசாலை சமூகம் உழைக்க வேண்டும்.

எமது மாகாணம் கல்வியிலே பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளது. கல்வியிலே பின்னடைவேற்பட்டதற்கு பல காரணங்கள் முன்வைக்கப்படுவதுடன் ஆளணி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளின்மையும் ஒரு காரணங்களாக முன்வைக்கின்றனர். ஆனால், ஏனைய மாகாணங்களோடு ஒப்பிட்டுப்பார்க்கையில் நகரப் பாடசாலைகளைத் தவிர ஏனைய குறிப்பாக கிராமப்புற பாடசாலைகள் வட மாகாணத்திலுள்ள பெரும்பாலான பாடசாலைகளைவிட உட்கட்டமைப்பலும் சரி ஆளணி வளத்திலும் சரி பின்னோக்கியேவுள்ளன.

பல்வேறு அமைப்புக்களும் மக்களும் எமது மாகாணத்திற்கு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறார்கள். இவ்வாறிருந்தும் நமது மாணவர்களின் பெறுபேறுகள் தேசியளவு ஒப்பீட்டிலே கடைசியிலே இருக்கிறது. இவ்விடயமே எங்களை உளரீதியாக பாதிக்கின்ற ஒரு விடயமாகவிருக்கின்றது. இதற்கான காரணங்களை ஆய்வின் மூலம் கண்டறிய வேண்டியுள்ளது.

இந்நிலையை கல்வி சமூகம் மட்டுமல்ல எமது மாகாணத்திலுள்ள ஒவ்வொருவரும் சிந்திக்கவேண்டிய ஒரு விடயமாகவிருக்கின்றது. தேவையற்ற பல சிந்தனைகளையும் கருத்துக்களையும் வளர்த்து வருகின்ற சமூக சிந்தனையாளர்கள் இந்தக் கல்வியிலே இருக்கிற தேக்க நிலையைப்பற்றியும் சிந்திக்கவேண்டியவர்;களாக இருக்கின்றார்கள். அது அவர்களுடைய ஒரு சமூகம் சார்ந்த கடமையாகவுள்ளது. இச்சிந்தனையை சமூகத்தின் மத்தியிலே வளர்க்கவேண்டிய முக்கிய கடமை எமக்கிருக்கின்றது.

ஜனாதிபதி நாடளாவிய ரீதியிலே போதை வஸ்து சம்மந்தமாக எடுத்துவரும் நடவடிக்கைகளைக் கவனித்திருப்பீர்கள். யாருமே நினைத்துப் பார்க்க முடியாத இடங்களிலே, யாருமே நினைத்;துப்பார்க்க முடியாத நபர்கள் எத்தகைய செயல்களிலே ஈடுபடுகிறார்கள் என்பதை பார்க்கும்போது அதிர்ச்சியாகவுள்ளது. இந்நாட்டிலே சட்ட ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டுமென்பதில் ஜனாதிபதி அவர்கள் மிகவும் கவனமாகவிருக்கிறார்.

வட மாகாணத்தில் சட்ட விரோத செயல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். சட்டமும் ஒழுங்கும் பாதுபாக்கப்படவேண்டும். மாணவர்கள் எவ்வொரு இடையூறுகளுமின்றி கல்வி கற்க வேண்டுமென்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு நானும் ஒரு அவசரமான கடிதம் எழுதியிருக்கின்றேன். அதற்கு அவர் மாணவர்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் கல்வியைப் பெறுவதற்கான சகல ஏற்பாடுகளும் தான் எடுப்பதாகவும் அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆரம்பித்துவிட்டதாகவும் தனது பதில் கடிதத்தில் எனக்குக் கூறியிருக்கின்றார்.

அந்நிலையை நீங்கள் உணர்ந்து கொண்டிருக்கிறீர்களென நான் நம்புகின்றேன். ஆனால் இது தனியாகப் பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகளால் மட்டும் செய்யக்கூடிய விடயமல்ல. ஏனெனில், இந்த சட்ட விரோத செயல்கள் நமது சமூகத்திலே புரயோடிப்போயிருக்கிறது. இதைச் செய்பவர்கள் நமது சமூகத்தில்தான் இருக்கின்றார்கள.

எனவே, இந்த சமூக விரோதிகளை அடையாளங்கண்டு அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியவர்களாக இச்சமூகத்திலிருக்கும் ஒவ்வொருவரும் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட விடயங்களைப்பற்றி பேசாமல் பேசக்கூடாத விடயங்களைப்பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கின்றோம். வன்முறைகள் நடந்துகொண்டிருக்கின்றன.

போதைவஸ்துகள் கடத்தப்பட்டு விநியோகிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது, மாணவர்கள் சீரழிந்து கொண்டிருக்கிறார்கள், சமூகம் சீரழிந்துகொண்டிருக்கிறது, பல குடும்பங்கள் வாழ்வாதாரமின்றி வறுமையில் வாடிக்கொண்டிருக்கிறார்கள். இவற்றையெல்லாம் விட்டுவிட்டு சம்மந்தமில்லாத விடயங்களைப் பற்றித்தான் எமது மாகாணத்தில் பேசப்படுகிறது.

எனவே, நமது சமூகத்தை உயர்த்தக்கூடிய விடயங்களிலே இந்த சமூக சிந்தனையாளர்கள் ஈடுபடவேண்டும். மக்களைத் தவறாக வழிநடத்வதற்கென்றே ஒரு குழு இருக்கின்றது. ஒரு கருத்தியலை சமூகத்தில் பரப்புவதனூடாக மக்களை தவறான பாதையில் அழைத்துச்செல்லவேண்டுமென்பது அக்குழுவின் செயற்பாடாகவிருக்கின்றது. அப்பேர்ப்பட்டவர்களின் முயற்சிகளை அண்மையில் நடந்த தேர்தலிலே மக்கள் தோற்கடித்திருக்கிறார்கள்.

அதாவது, தேவையற்ற பொய்யான பிரசாரங்கள், வீணான கதைகள், கட்டுக்கதைகள், பொய் வதந்திகளுக்கெல்லாம் மக்களால் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. வட கிழக்கு மாகாணங்களில் ஜனாதிபதியின் செயற்பாட்டினையும் அவரின் நேர்மையான தலைமைத்துவ முடிவுகளையும் நாட்டு மக்களுக்காகத் தன்னை அர்ப்பணித்திருக்கிற செயற்பாட்டினையும் மக்கள் தற்போது ஏற்றுக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் தொடர்ந்து பொய்யான பிரசாரங்களை தற்போது பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

எனவே, மக்கள் அவற்றை உணர்ந்துகொள்ள வேண்டும். உலக நாடுகளோடு ஒப்பிடுகையிலே அபிவிருத்தியடைந்த நாடுகளெல்லாம் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தப் போராடிக்கொண்டு மக்களைப் பாதுகாக்க தடுமாறிக்கொண்டிருக்கும் வேளையிலே இலங்கை மட்டும்தான் தற்போது தலை நிமிர்ந்து நிற்கின்றது. இதுவரை சமூகத் தொற்று மூலம் கொரோனா பரவாத ஒரு நாடாக இலங்கை மட்டும்தான் இருக்கிறது.

அதோடு மட்டுமல்லாமல், மனிதாபிமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுகின்ற ஒரு நாடாகவும் இருக்கின்றது. வெளி நாடுகளிலே தவிக்கும் நமது நாட்டவர்களைக் குறிப்பாக மாணவர்களை, வேலையற்றுத் தவிக்கும் இளைஞர்கள் அனைவரையும் நமது நாட்டிற்குக் கொண்டுவந்து மனிதாபிமான வேலைகளில் ஈடுபடுகின்றது. இப்பேர்ப்பட்;ட செயல் வீரமிக்க தலைமைத்துவத்தை ஜனாதிபதி அவர்கள் வழங்கியுள்ளார்.

எனவே, உண்மைகளை ஏற்றுக்கொள்ளுகின்றவர்களாக வட கிழக்கு மக்கள் மாறிக்கொண்டிருப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் மென்மேலும் கதைகளைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதை விடுத்து உண்மைகளை தரிசிக்க மக்கள் முயல வேண்டும். அதனூடாக எமது மாகாணத்தின் அபிவிருத்திகளைப் பெற்றுக்கொள்ள தயாராகுங்கள்.

இப்புதிய பாடசாலைக் கட்டடத் தொகுதியைத் திறந்து வைப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். இப்பாடசாலையின் தேவைகளைப்பற்றி பிரதம செயலாளரிடம் கூறும்போது அவர் நீங்கள் மத்திய அரசுடன் இணைவதற்கு விரும்புகின்ற பாடசாலைகளில் ஒன்றாக இருப்பதாகவும் அப்படியிருக்க எப்படித் அவர்களின் தேவைகளை மாகாண சபையூடாகச் செய்ய முடியுமென்றும் ஒரு கேள்வியை முன் வைக்கின்றார்.

பாடசாலைகளை உள்வாங்குகின்ற செயற்பாட்டினை எதிர்த்து கடந்த திங்கட்கிழமைதான் கல்வி அமைச்சின் செயலாளரிடம் முறையிட்டிருந்தோம். அதேவேளையில் இந்த மக்களின் வாழ்க்கையையும் பொருளாதாரத்தையும் முன்னேற்ற நாங்கள் தயாராகவுள்ளோம் என்றார்.