சென்னையில் கடந்த 10 ஆண்டுகளில் 10 பேர் போலீசாரின் என்கவுண்ட்டருக்கு பலியாகி உள்ளனர்.
சென்னையில் ‘என்கவுண்ட்டர்’ மூலம் ரவுடிகள் போலீசாரால் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தப்படும் கலாசாரம் 1998-ம் ஆண்டுக்கு பிறகு தான் அதிகளவில் அரங்கேறியது. 1998-ம் ஆண்டு ரவுடி ஆசைத்தம்பி சுட்டு வீழ்த்தப்பட்டார். 2002-ம் ஆண்டு விஜயகுமார் போலீஸ் கமிஷனராக இருந்த போது, சென்னையில் ரவுடி வீரமணி உள்பட 11 பேர் போலீசாரின் துப்பாக்கி குண்டுக்கு வீழ்ந்தனர்.
கொள்ளையன் முருகேசன் என்பவர் கூட என்கவுண்ட்டர் முறையில் சுட்டு வீழ்த்தப்பட்டார். தற்போதைய தமிழக டி.ஜி.பி. திரிபாதி தென்சென்னை இணை கமிஷனராக பணியாற்றிய போது, சென்னையில் அதிகளவில் என்கவுண்ட்டர்கள் நடந்தன.
அதன்பின்னர் ஓய்வு பெற்ற டி.ஜி.பி. ஜாங்கிட் சென்னை கூடுதல் கமிஷனராக பணியாற்றிய போது ரவுடிகள் ‘பங்க்’ குமார், வெள்ளை ரவி ஆகியோர் என்கவுண்ட்டருக்கு பலியானார்கள்.
ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் செங்கல்பட்டு கிழக்கு போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய போது பிரபல கொள்ளையன் சின்னமாரி மற்றும் 4 ரவுடிகள் என்கவுண்ட்டர் முறையில் சுட்டு வீழ்த்தப்பட்டார்கள்.
இதுபோல் போலீசாரால் நடத்தப்பட்ட என்கவுண்ட்டர் வரலாறு தற்போதுவரை நீண்டுக் கொண்டே இருக்கிறது. கடந்த 2010-ம் ஆண்டு முதல் கடந்த 10 ஆண்டுகளில் 10 பேர் சென்னையில் போலீசாரின் என்கவுண்ட்டரில் உயிரிழந்துள்ளனர்.
2010-ம் ஆண்டு நீலாங்கரையில் திண்டுக்கல் பாண்டி, கூடுவாஞ்சேரி வேலு ஆகிய ரவுடிகள் போலீஸ் துப்பாக்கி குண்டுக்கு இரையானார்கள். 2011-ம் ஆண்டு போலீஸ் என்கவுண்ட்டர் எதுவும் நடக்கவில்லை.
2012-ம் ஆண்டு பீகார் மாநிலத்தை சேர்ந்த வங்கி கொள்ளையர்களான வினோத்குமார், நவநீத் குமார், ஜெயபிரகாஷ் நாராயணன், ஹரிஷ்குமார், வினய் பிரசாத் ஆகியோர் சென்னை வேளச்சேரியில் போலீசாரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதன்பின்னர் 2013-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை சென்னையில் போலீஸ் என் கவுண்ட்டருக்கு யாரும் பலியாகவில்லை.
2018-ம் ஆண்டு சென்னை தரமணியில் ரவுடி ஆனந்தன் என்பவர் போலீஸ் என்கவுண்ட்டரில் உயிரிழந்தார். 2019-ம் ஆண்டு சென்னை மாதவரத்தில் ரவுடி வல்லரசு என்பவர் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தப்பட்டார்.
அதே ஆண்டு சென்னை கொரட்டூரில் தாதா மணிகண்டன் என்ற ரவுடி போலீஸ் என்கவுண்ட்டரில் பலியானார். கடந்த 10 ஆண்டுகளில் 11-வது நபராக ரவுடி சங்கர் போலீசாரின் துப்பாக்கி குண்டுக்கு சென்னை அயனாவரத்தில் இரையாகி உள்ளார்.

