கீழடியில் அகழாய்வு பணி : அகரத்தில் பழங்கால வளையல்கள் கண்டெடுப்பு

218 0

கீழடியில் அகழாய்வு பணியின் போது அகரம் பகுதியில் நேற்று நடந்த அகழாய்வில் உடைந்த நிலையில் பழங்கால வளையல்கள் கண்டெடுக்கப்பட்டன.

சிவகங்கை மாவட்டம் கீழடி,அகரம், கொந்தகை, மணலூரில் 6-ம் கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது. நேற்று கீழடியில் பெரிய சுவர் தெரிந்த பகுதியில் தொடர்ந்து பணிகள் மேற்கொண்ட போது பழங்கால செங்கல் கட்டிட பகுதி கிடைத்துள்ளது. பழங்கால மக்கள் பயன்படுத்திய செங்கல் நன்கு அகலமாக உள்ளது. இதன் மூலம் பண்டைய தமிழர்கள் செங்கல் தயாரித்து அவற்றை கட்டிட வேலைக்கு பயன்படுத்தி இருப்பது தெரிய வருகிறது.

இதேபோல் அகரம் பகுதியில் நேற்று நடந்த அகழாய்வில் உடைந்த நிலையில் பழங்கால வளையல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதுகுறித்து மாநில தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் கூறியதாவது:- இந்த வளையல்கள் சங்கு வளையல் ரகத்தை சேர்ந்தது. பண்டைய கால பெண்கள் இந்த வளையல்களை விரும்பி அணிந்துள்ளனர். இந்த வளையல்களின் நீளம் 3 செ. மீட்டர் கொண்டதாகவும், ½ சென்டி மீட்டர் அகலம் உள்ளது. தொடர்ந்து 4 இடங்களில் அகழாய்வு பணிகள் நடைபெறும்போது மேலும் பல்வேறு பொருட்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.