வீடியோ காலில் பேசிய நளினி, முருகன்: ஆட்கொணர்வு மனுவை முடித்து வைத்து ஐகோர்ட்டு உத்தரவு

246 0

நளினியும், முருகனும் செல்போனில் ‘வீடியோ கால்’ மூலம் 30 நிமிடங்கள் பேசியதாக அரசு தரப்பில் கூறப்பட்டதையடுத்து ஆட்கொணர்வு மனுவை முடித்து வைத்து சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி, அவரது கணவர் முருகன் ஆகியோர் வேலூர் மத்திய சிறையில் தனித்தனியாக அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சிறை விதிகளின்படி 15 நாட்களுக்கு ஒரு முறை சந்தித்து வந்தனர்.

இந்தநிலையில் திடீரென கடந்த 3 மாதங்களாக அவர்கள் இருவரையும் சந்திக்க சிறை அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை. இதை கண்டித்து முருகன் உண்ணாவிரதபோராட்டத்தில் ஈடுபட்டார். அதேநேரம், இருவரையும் சந்திக்க அனுமதி வழங்க சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட கோரி நளினியின் தாயார் பத்மா, சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரே‌‌ஷ், டி.கிரு‌‌ஷ்ணகுமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, நளினியும், முருகனும் செல்போனில் ‘வீடியோ கால்’ மூலம் 30 நிமிடங்கள் பேசியதாகவும், இதையடுத்து முருகன் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு விட்டதாகவும் அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் கூறினார். இதை பதிவு செய்துக் கொண்ட நீதிபதிகள், ஆட்கொணர்வு மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.