சிறிலங்காவில் ஜனாதிபதியால் ஏனைய சவால்களையும் இலகுவாக முறியடிக்க முடியும்- விமல்

241 0

சிறிலங்காவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடிந்த ஜனாதிபதிக்கு ஏனைய சவால்களைகளை இலகுவாக முறியடிக்க முடியுமென அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் விமல் வீரவன்ச மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டில் கொரோனாவினால் 11பேர் உயிரிழந்துள்ளனர். அதில் ஒருவரின் மரணம் மாத்திரமே சந்தேகத்திற்கிடமாக காணப்படுகின்றது.

அதாவது 10பேர் வெளிநாட்டில் இருந்து கொரோனா தொற்றுடன் வருகை தந்திருந்தவர்களே உயிரிழந்தனர்.

எமது நாட்டில் வைத்து கொரோனா தொற்று ஏற்பட்டு எவரும் மரணிக்கவில்லை என்பது உலக சாதனையாகும்.

அதேபோன்று கடற்படையில் ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தபோதிலும் எவருக்கும் உயிராபத்து இருக்கவில்லை.

இவைகள் அனைத்துக்கும் ஜனாதிபதி முன்னெடுத்த செயற்பாடுகளே காரணமாகும். அதாவது நாடாளுமன்ற அதிகாரமின்றியே கொரோனா தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்.

அதேபோன்று எம்.சீ.சீ ஒப்பந்தம் உட்பட ஏனைய சவால்களையும் ஜனாதிபதி இலகுவாக வெற்றிகொள்வார்.

எனினும் இவற்றை மாற்றியமைக்க பலமான நாடாளுமன்ற அதிகாரம் தேவைப்படுகிறது.

அத்துடன் கடந்த தேர்தலில் ஜனாதிபதிக்கு ஆதரவாக வாக்களிக்காத தரப்பினர்  கூட இம்முறை மொட்டு சின்னத்திற்கு வாக்களிக்க தீர்மானித்துள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார்.