ஊரடங்கை நீட்டிக்க முதல்வரிடம் மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்யவில்லை

234 0

கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு மட்டுமே தீர்வு அல்ல என்பதால், ஊரடங்கை நீட்டிக்க முதல்வரிடம் பரிந்துரை செய்யவில்லை என மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், மருத்துவ நிபுணர் குழுவினருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது, தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், நோய்த் தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கை நீட்டிக்கலாமா? அல்லது கூடுதல் தளர்வுகள் அறிவிக்கலாமா? என்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.
நோய் தாக்கம் அதிகம் உள்ள சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் முழு முடக்கத்தை நீட்டிக்கவேண்டுமா? என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனையின்போது, கள நிலவரம் குறித்து மருத்துவ நிபுணர் குழு விளக்கமாக தெரிவித்தது. அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சரிடம் பரிந்துரை செய்துள்ளது.
பின்னர் மருத்துவ நிபுணர் குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
ஊரடங்கு மட்டுமே கொரோனாவுக்கு தீர்வு அல்ல. எனவே, ஊரடங்கை நீட்டிக்க முதல்வரிடம் பரிந்துரை செய்யவில்லை. தமிழகம் முழுவதும் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்று கூறி உள்ளோம். சென்னையைப்போன்று பாதிப்பு அதிகரித்து வரும் திருச்சி, மதுரை, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் பரிசோதனைகளை அதிகரிக்கும்படி கூறி உள்ளோம்.
பாதிப்பு இரட்டிப்பாகும் வேகம் குறைந்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு நீட்டிப்பு வேண்டாம்.
காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் தனிமைப்படுத்திக் கொள்வது அவசியம். சுவை, மணம் தெரியாதவர்கள் காயச்சல் மையம் சென்று பரிசோதனை செய்ய வேண்டும். தமிழகத்தில் 80 சதவீதம் பேருக்கு லேசான அறிகுறிதான் இருப்பதால் பயப்பட வேண்டாம். மக்கள் அடர்த்தி அதிகம் உள்ள பகுதிகளில் கொரோனா பரவல் அதிகமாக இருக்கும். எனவே மக்கள் ஒத்துழைப்பு அவசியம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.