கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காத கடைகளுக்கு சீல் வைக்கப்படும்

21 0

பெரம்பலூரில் கொரோனா வைரசை தடுக்கும் விதிமுறைகளை கடைப்பிடிக்காத கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்று மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு நீதிராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வர்த்தக நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து பெரம்பலூர் நகர வணிகர்களுடன் நேற்று போலீசார் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதற்கு மகளிர்- குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவின் பெரம்பலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு நீதிராஜ் தலைமை தாங்கினார்.

பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு கென்னடி, இன்ஸ்பெக்டர்கள் சுப்பையா (பெரம்பலூர்), கோபிநாத் (போக்குவரத்து), கலையரசி (மகளிர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு நீதிராஜ் பேசியதாவது:-

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடைகளில் பொருட்களை வாங்கும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க ஏதுவாக வணிகர்கள் தங்களது கடைகளுக்கு முன்பு ஒரு மீட்டர் இடைவெளி விட்டு வட்டம் போட்டிருக்க வேண்டும். கடைகளுக்கு முககவசம் அணியாமல் வரும் பொதுமக்களுக்கு வணிகர்கள் பொருட்களை வழங்கக்கூடாது. அவர்களை முககவசங்கள், கையுறைகள் கட்டாயம் அணிந்து வர அறிவுறுத்த வேண்டும்.

மேலும் வாடிக்கையாளர்கள் கைகளை சுத்தம் செய்வதற்கு கடைகளில் கிருமி நாசினி வைத்திருக்க வேண்டும். அரசு அறிவித்துள்ள ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றி வணிகர்கள் வியாபாரம் செய்ய வேண்டும். மேலும் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் முககவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடித்து பொருட்களை வாங்கி செல்ல வேண்டும் என்பதனை வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தும் விதமாக அறிவிப்பு பலகை வணிகர்கள் தங்களது கடைகளின் முன்பு வைத்திருக்க வேண்டும்.
ஊரடங்கு விதிமுறைகள், கொரோனா வைரஸ் தடுக்கும் விதிமுறைகளை கடைப்பிடிக்காத கடைகளுக்கு போலீசார் முதல், 2 முறை அபராதம் விதிப்பார்கள். அதனையும் மீறி செயல்படும் கடைகளுக்கு நகராட்சி மூலம் ‘சீல்’ வைக்கப்படும். மேலும் வணிகர்கள் தங்கள் கடைகளுக்கு முன்பு வாடிக்கையாளர் வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறு இல்லாதவாறு நிறுத்தி வைக்க அறிவுறுத்த வேண்டும். திருட்டு சம்பவங்களை தடுக்க வணிகர்கள் தங்களது கடைகளில் கண்காணிப்பு கேமராக்களை கட்டாயம் பொருத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் வணிகர்கள், நகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் போலீஸ் ஏட்டு செல்வம் தலைமையிலான போலீசார் செய்திருந்தனர்.